logo
முகக் கவசம் - பொது இடங்களில் எச்சில் துப்புதல்: ஈரோடு மாவட்டத்தில் 42  ஆயிரம் பேருக்கு அபராதம் விதிப்பு

முகக் கவசம் - பொது இடங்களில் எச்சில் துப்புதல்: ஈரோடு மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிப்பு

07/Oct/2020 11:16:54

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் சர்வசாதாரணமாக 140 - க்கும் மேற்பட்டவர்களை வைரஸ் தாக்கி வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்  போன்ற  பாதுகாப்பு வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால்,பொதுமக்கள் சரியாக கடைபிடிக்காததால் மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் அதிகரித்தது. இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200-ம், பொது இடத்தில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளி கடைப் பிடிக்காமல் இருப்பது போன்ற செயல்களுக்கு ரூ 500 அபராதமும், கடைகள், ஜவுளி,  வணிக வளாகங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல்  இருந்தால் ரூ 5,000 அபராதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. முதலில் மாநகராட்சி அதிகாரிகள் மட்டும் அபராதம் விதித்துள்ளனர். தற்போது அவர்களுடன் சுகாதாரத்துறையினர் வருவாய்த்துறையினர் காவல்துறையினரும்  ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

 ஈரோடு மாநகராட்சி பகுதியில்  தினமும் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் என தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல், மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் அமைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை முக கவசம் அணியாமல் வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள் என 42, 283  பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ரூ.27 லட்சத்து  98 ஆயிரத்து 500   வரை அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். முக கவசம் உயிர் கவசம் என்ற வாசகத்தை மக்கள் மறக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.மேலும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தடையை மீறி யதாக இதுவரை 32 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


                                                                               


Top