logo
ஈரோடு மாவட்டத்தில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா  பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

07/Oct/2020 10:46:57

மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 78 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தாக்கி வருகிறது. பேருந்துகள் இயக்கம், பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக் கவசம் முறையாக அணியாமல் இருப்பது போன்ற காரணங்களால் மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இதைத் தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, சூரம்பட்டி வலசில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பி.பி. அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கல்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பெரியசேமூரில்  உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் என 5 இடங்களில் கொரோனா  நிரந்தர பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.

  இங்கு தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல், ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஸ்கிரீனிங் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள், தனியார் மருத்துவமனைகளை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இலவச நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 78 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் வைரஸ் பாதித்தவர்கள்  எண்ணிக்கை கூடி வருவதால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கை வசதிகளும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் 284 படுக்கை வசதிகளும், அனைத்து தனியார் சிறப்பு மருத்துவ மனைகளில் 575 படுக்கை வசதிகளும், பெருந்துறை கோபி, அந்தியூர்,நம்பியூர், திங்களூர், சித்தோடு, சென்னிமலை போன்ற பகுதிகள் என  மாவட்டம் முழுவதும் 3,635 படுக்கை வசதிகள்  தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 


Top