logo
வலையர் புனரமைப்பு வாரியம் அமைப்போம்: மதுரையில் நடந்த வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர்   எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு

வலையர் புனரமைப்பு வாரியம் அமைப்போம்: மதுரையில் நடந்த வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு

01/Feb/2021 04:38:11

மதுரை, பிப்:  தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.31) நடந்தது. சங்க நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமை  வகித்தார். மாநாட்டில் பங்கேற்ற  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

முத்தரையர்கள் பல்லவப் பேரரசுக்கு உள்பட்டு, தஞ்சாவூர், பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதிளை ஆண்டு வந்தனர் எனவும் தஞ்சைக்கு அடுத்த செந்தலை என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்துள்ளது எனவும் அங்குள்ள கோயில் மண்டபத் தூண்களில் இருக்கும் கல்வெட்டுகளில் முத்தரையர் பரம்பரைக்குச் சான்றாகக் காண முடிகிறது.

ஒரு காலகட்டத்தில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் கடும்போர் நடந்தது. ஏறத்தாழ பல்லவ மன்னன் தோற்றுப்போகும் நிலை, பல்லவ நாட்டின் பெரும் நகரங்கள், கிராமங்கள், ஆறுகள், குளங்கள் என்று ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டே வந்தன. 

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பல்லவ மன்னன், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையரிடம் உதவி கேட்கிறார். நட்பு நாடி வந்தவருக்கு நம்பிக்கையுடன் பெரும்பிடுகு உறுதியளிக்கிறார். பாண்டிய மன்னனை வென்று, சோழ மன்னனை வென்று தொடர்ந்து பல போரில் வெற்றி வாகை சூடினார் பெரும்பிடுகு முத்தரையர். அவர் அபிமான தீரன், நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு பட்டப்பெயர்களில் பெருமையுடன் அழைக்கப்பட்டார்.

முத்தரையர் பெருமை

 செந்தலைக் கல்வெட்டு ஆதாரப்படி முதன்முதலாக நாம் அறிய வருவது பெரும்பிடுகு முத்தரையர் என்ற மன்னர் தான். இவருடைய மகன் இளங்கோவடி அரையர். இவருடைய மகன்தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். இவரது காலத்தில்தான் முத்தரையர்கள் பெரும் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளனர். பல்லவர்களின் உற்ற தோழர்களாக முத்தரையர்கள் இருந்தாலும் கலை பண்பாட்டில் பல்லவர்களையும் விஞ்சி நின்றுள்ளதாய் வரலாறு கூறுகிறது.

முத்தரையர்கள், சமய, கலாச்சார, இலக்கிய, கலைத் துறைகளில் எண்ணற்ற கொடைகளைத் தந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

சாதனைகள்

பழி ஈசுவரம் குகைக்கோயில், திருமெய்யம் அருகில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவில், தேவர்மலை கற்றளி, மலையடிப்பட்டி வாகீஸ்வரர் குகைக்கோயில் போன்ற கொடைகளை முத்தரையர்கள் நமக்கு அளித்துள்ளனர். ஆலம்பாக்கத்தில் உள்ள மார்ப்பிடுகு ஏரி, திருவெள்ளாறையில் உள்ள மார்ப்பிடுகு பெருங்கிணறு ஆகியவற்றை உருவாக்கி அப்பகுதி மக்களின் தாகத்தைத் தீர்த்தவர்கள் முத்தரையர்கள்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் போன்று அரசாண்ட மன்னர்களையும், நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி, பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களையும் சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் ஆட்சித் திறத்தையும் தியாகங்களையும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசும் உருவாக்கி பராமரித்து வருகிறது.

கி.பி. 7 -ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் களம் பல கண்டு, வெற்றிகள் பல கொண்டு, திறம்பட ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். அவரின் வீரத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 1996 -ஆம் ஆண்டு திருச்சி மாநகரில்  ஜெயலலிதாவால் அன்னாருக்கு அரசு சார்பில் சிலை  நிறுவப்பட்டது. அவருக்கு புகழையும், பெருமையையும் சேர்த்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா.

அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்று சட்டமன்றப் பேரவையில் பேரவை விதி 110 ன் கீழ் 14.2.2019 அன்று நான் அறிவித்திருந்தேன்.

மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் அம்மாவின் அரசு, சட்டமன்றப் பேரவையில் அறிவித்தவாறு, திருச்சி மாவட்டம், கோ.அபிஷேகபுரத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்திற்கு 16.6.2020 அன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முத்தரையர் சிலை: 

மேடையில் வீற்றிருக்கும் தலைவர்கள், இங்கு வந்திருக்கும் முத்தரையர்கள் வேண்டுகோளை ஏற்று வலையர்குளம் மற்றும் ஆணையூர் ஆகிய இரண்டு இடங்களில் வீர முத்தரையர் சிலை உரிய அனுமதியுடன் அமைக்கப்படும்.முத்தரையர்களின் வரலாறை நினைவுகூரும் வேளையில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்தும் இந்த வலையர் வாழ்வுரிமை மாநாடும் வரலாற்றில் பதிவு செய்யப்படும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் வெற்றிநடை போடும் அம்மாவின் அரசும் முத்தரையர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருந்து வருகிறது என்பதும் வரலாற்றுச் சான்றாய் நீடிக்கும்.

முத்தரையர் பெருமக்கள் பெரும்பாலும் வேளாண் தொழிலை நம்பி இருக்கின்றவர்கள். இரவென்றும், பகலென்றும் பாராமல், மழையும், வெயிலும் பாராமல் நாட்டுக்கு உணவளிக்க பாடுபடுகின்ற விவசாய பணியிலே ஈடுபட்டிருக்கின்ற முத்தரையர் பெருமக்கள் இந்த நாட்டு மக்களுக்கு வயிறார உணவு கிடைக்க உழைக்கும் வர்க்கம் இந்த முத்தரையர் வர்க்கம். வேளாண் பணி என்பது சாதரண பணி அல்ல. கடுமையாக உழைக்கின்ற பணி. அப்படி உழைப்பிற்காக பிறந்த சமுதாய மக்கள் என்றென்றும் வளர வேண்டும், போற்றப்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு துணை நிற்கும்

முத்தரையர் சமுதாய மக்கள் உழைக்கப்பிறந்தவர்கள், அவர்களுக்கு எங்கள் அரசு துணை நிற்கும். எம்.ஜி.ஆர். இந்த சமுதாய மக்கள் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பு செய்தார். முத்தரையர் மன்னர்களின் வரலாற்றோடு அம்மாவின் சாதனைகளையும், அம்மா அரசின் சாதனைகளையும் அறிந்து கொள்ள ஏதுவாக இந்த வலையர் வாழ்வுரிமை மாநாட்டினை ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் மற்றும் தலைவர் கே.கே.செல்வகுமாருக்கு எனது பாராட்டுகளை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சமுதாய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சமுதாய மக்கள் முன்னேற வேண்டும் என்று அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தரையர் மக்கள் இந்த திடலில் கடல் என கூடியுள்ளார்கள். உங்களுடைய குரலை எங்களது அரசு செவி சாய்த்து, முத்தரையர் மக்களின் எதிர்பார்ப்பான வலையர் புணரமைப்பு வாரியம் அமைத்திட அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு. இந்த சமுதாய மக்கள் மென்மேலும் உயர்வுபெற எங்களது அரசு துணை நிற்கும் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், சி. விஜயபாஸ்கர் மற்றும் ஆயிரக்கணக்கான முத்தரையர் சமுதாய தலைவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Top