logo
ஈரோடு மாவட்டத்தில் கடந்த  3 மாதத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 89 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 89 பேர் கைது

01/Sep/2021 11:54:18

ஈரோடு, செப்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி. அலுவலக   செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் உத்தரவு படி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வழிகாட்டுதல்படி சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன் நேரடி மேற்பார்வையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது ஈரோடு மாவட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை  சம்பந்தமாக 41  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 89 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருபவர்கள் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலியாக எண்களை வெள்ளைத்தாளில் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என்றும் பரிசு கண்டிப்பாக விழும் என்றும் நேரடியாக வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பி ஒரு சில எண்கள் மற்றும் பரிசு விழுந்ததாக கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தடை செய்யப்பட்ட லாட்டரியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாக விற்பனை செய்வது மற்றும் ஏமாற்றுவது குற்றமாகும். அதேபோன்று தடை செய்யப்பட்ட லாட்டரிகளை வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் சட்டவிரோத நடவடிக்கை குறித்து 9655220100 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.


Top