logo
தை அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

தை அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

11/Feb/2021 10:01:54

திருநெல்வேலி: தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணி நதியில் ஆயிரக்கணக்கானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

அமாவாசை நாள்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம். அதிலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பொதுமக்கள் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பித்ரு கடன் தீர்ப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. 

இதையடுத்து பாபநாசம் தாமிரவருணி நதியில் புனித நீராடுவர். பாபநாசம், தாமிரவருணி, காசி நதிக்கு ஒப்பாக கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரவருணியில் நீராடி முன்னோர்களுக்கு பித்ரு கடன் தீர்ப்பார்கள். 

இதையடுத்து பாபநாசம் சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாதங்களாக ஆறு போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் தடை விலக்கப்பட்டதையடுத்து தாமிரவருணியில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுகிறது. மேலும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் வனத்துறை கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பக்தர்களும் வந்து தாமிரவருணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

 

Top