logo
ஈரோடு மாவட்டத்தில்   14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

30/Aug/2021 12:23:53

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்   14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

தமிழகத்தில்  செப்.1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 403 மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் வரும் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

வகுப்பறையை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

 மாவட்டத்தில் மொத்த உள்ள 8,904 ஆசிரியர்கள், பணியாளர்களில், கொரோனா தடுப்பூசி முதல் டோசினை 6,028பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டாவது டோசினை 3,619பேர் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் 70சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

மீதமுள்ள 2,876 ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி இதுவரை எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களுக்காக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி,   ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள பள்ளியில்  நடந்தது. இதில் தடுப்பூசி கொள்ளாத ஆசிரியர்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர்.  இந்த பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்.  இதேபோல் மற்ற 13 ஒன்றியங்களிலும் இன்று ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Top