logo
ஈரோட்டில்  14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் :மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

ஈரோட்டில் 14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் :மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

28/Aug/2021 11:23:15

 ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்   14 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  தெரிவித்துள்ளார்.

கல்வி தரம் பாதிக்காத வகையிலும் அரசு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது. அதன்படி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி 9-ஆம் வகுப்பு முதல்  12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பள்ளி வளாகம் வகுப்பறை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வருப்புகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருக்கும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. கழிவறைகள் சுத்தப்படுத்தப் பட்டு வருகின்றன. பள்ளி திறப்பை முன்னிட்டு மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து  அரசு வெளியிட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் மாணவ மாணவிகள் அமர வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்  நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  

குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அரசு ,அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் கோப்புகள் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றப்பட்டு வருகின்றன. கழிவறைகள், தண்ணீர் மேல்நிலைத் தொட்டி ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: வரும் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு திறக்கப்படுவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  மாணவ ,மாணவிகள் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

வகுப்பறையை  தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலில் கிருமிநாசினி சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமான ஒன்று. 

ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மீதம் 30 சதவீத ஆசிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஒரு மையம் வீதம் ஆசிரியர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. 

மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பெயரில் மாவட்ட சுகாதாரத்துறையினர்  ஏற்பாட்டில் ஆசிரியருக்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோட்டில் நேற்று கல்விகுறை இயக்கத்தின் இணை இயக்குனர் குமார் தலைமையில் அரசு. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம்  நடைபெற்றது. 

இதில்  மாணவ மாணவிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். 

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, 10-ஆம்  வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரும் வகையில் படங்கள் எடுக்கப்படும். மாணவர்கள் அதிகம் உள்ள வகுப்புகளில் சுழற்சி முறையில் பாடங்கள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள வகுப்புகளில் பிரச்னை இல்லை என்றார் அவர். 


                                                   

        


Top