logo
ஈரோடு மாவட்டத்தில்  பரவலான மழை: பவானிசாகரில் 27.8 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலான மழை: பவானிசாகரில் 27.8 மி.மீ பதிவு

21/Feb/2021 08:36:42

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலம் தொடங்குவதன் முன்னோட்டமாக வெயில் வாட்டி எடுத்தது. காலை 8 மணிக்கே வெயில் கடுமையாக இருந்து வந்தது. இரவு முழுவதும் பனி தாக்கம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணிக்கு வழக்கம்போல் வெயிலின்  தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் 12 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. அடுத்த அரை மணி நேரம் திடீர் சாரல் மழை பெய்தது. இதன் பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத் தொடர்ந்து 5 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் இந்த மழை கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

 தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக சாலைகள் குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. திடீர் மழையால் இங்கு மழை நீர் தேங்கியது. குண்டும் குழியுமான ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக மாறியது. திடீர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. 

ஈரோடு, கவுந்தம்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானிசாகர், கொடுமுடி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 27.8 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:பவானிசாகர் - 27.8, ஈரோடு - 25, பவானி - 18, அம்மாபேட்டை - 17.2, தாளவாடி - 17, கொடுமுடி - 15.8, கவுந்தப்பாடி - 13.4, மொடக்குறிச்சி - 10, சத்தியமங்கலம்-7, கோபி - 5, வரட்டுப்பள்ளம் - 5, சென்னிமலை - 3, கொடுமுடி - 1.

Top