logo
ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

05/Oct/2020 05:43:36

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த மாத்தூரில் அரசாங்கம் ஏழைகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூரில் காமாச்சியாபிள்ளை என்பரது 196.25 ஏக்கர் நிலத்தை நில உச்சவரம்பு சட்டத்தின்படி கடந்த 1980-ஆம் ஆண்டு கையகப்படுத்தி 14.06.1983 அன்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடத்தை மாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான மண்டையூர், ராசிபுரம், சொக்கலிங்கபுரம், வடகாடு, கையனாங்கரை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 156 ஏழை, எளிய தலித் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆனால், நிலத்திற்கான அரசு நிர்ணயித்த தொகையை தவனை முறையில் செலுத்துவதற்கான -படிவம் வழங்கப்படவில்லை. நிலத்தை அளந்து ஒப்படை செய்யப்படவும் இல்லை. நிலத்தை அளந்து பயனாளிகளிடம் ஒப்படை செய்யக் கோரியும், -படிவம் வழங்கக்கோரியும் சம்மந்தப்பட்ட பயனாளிகள் பலமுறை திருச்சி நில நிர்வாக உதவி ஆணையரிடம் பலமுறை மனுக்கொடுத்தனர். ஆனால், அவர்களது கோரிக்கை இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை. மேலும், மேற்படி நிலங்களை பாவேந்தர் கல்லூரி, பைப்லைன் பால் ஆப் இந்தியா, வில்சன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் ஆக்கிரமித்து உள்ளனர். மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு இடத்தை அளந்து ஒப்படை செய்யக்கோரியும், நிலத்திற்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சத் தொகையை தவனை முறையில் செலுத்துவதற்கான -படிவத்தை வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க கிளைத் தலைவர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, விவசாயதொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், விவசாய சங்க மாவட்டத் தலைவர் .ராமையன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் சா.தோ.அருணோதயன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம், விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பீமராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.சி.ரெங்கசாமி, பி.சின்னப்பன், எஸ்.சுப்பிரமணியன், ஆறுமுகம், அசோக்குமார், அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

                                                                              

        

Top