logo
ஈரோட்டில் கணவரை இழந்த வேதனையில்  மனைவி தனது மகன் மகளுடன் விஷம் அருந்தி  தற்கொலை

ஈரோட்டில் கணவரை இழந்த வேதனையில் மனைவி தனது மகன் மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை

25/Jun/2021 05:26:33

ஈரோடு, ஜூன்: ஈரோடு பகுதியில் கணவரை இழந்த வேதனை தாங்காத மனைவி  தனது மகன் மகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு    திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பார்த்தசாரதி (67).இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும் நித்தியா, ரம்யா என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஹரிஹரன் மஸ்கட்டில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு 11 வயதில் மகதி என்ற மகளும், 6 வயதில் யாதவ்கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மகதி சென்னை மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு, யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ம்  வகுப்பு படித்து வந்தனர்.

அமைதியான நீரோடை போல போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சூறாவளியாக வந்த கொரோனா சுழற்றி அடித்து புரட்டிப்போட்டது.

கடந்த மாதம் 2 - ஆம் தேதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ஆம் தேதி உயிரிழந்தார். கணவரின் பிரிவு  மனைவி  நித்யாவை வாட்டி வதைத்தது.

இதையடுத்து நித்யா தனது மகன், மகளுடன் ஈரோடு திண்டலில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவர்  பிரிவைத் தாங்க முடியாத நித்யா  தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி வியாழக்கிழமை பிற்பகலில்  சாப்பாட்டில் விஷ மாத்திரையை கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கலந்து கொடுத்து தானும் அதை சாப்பிட்டாராம்.

பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு  தூங்க சென்று விட்டனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அந்த அறையில் விஷ மாத்திரை  கிடந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி மகள், பேரன் ,பேத்தி மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன்  ஆகிய 3  பேரும்  உயிரிழந்தனர். மூவரது பிரிவால்  அவரது பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top