logo
ஈரோட்டில் திரையரங்குகள் திறப்பு: தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு பின்னரே ரசிகர்கள்  அனுமதி

ஈரோட்டில் திரையரங்குகள் திறப்பு: தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு பின்னரே ரசிகர்கள் அனுமதி

27/Aug/2021 01:00:25

ஈரோடு, ஆக: ஈரோட்டில் 4 மாதங்களுக்குப்பின்னர்  திரையரங்குகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டபோது தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு பிறகோ ரசிகர்கள்  அரங்கத்துக்குள்  அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைய தொடங்கியதையொட்டி ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது.கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது.  ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் 50 தியேட்டர்கள் உள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி கடந்த 23-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தார். இதனை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது. தியேட்டர்கள் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 23-ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிட அனுமதி கிடைத்தாலும், புது படங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.  இந்நிலையில்  வியாழக்கிழமை  முதல் ஈரோட்டில் தியேட்டரில் படங்கள் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4  தியேட்டர்களில் காஞ்சுரிங் என்ற ஆங்கில மொழி பேய் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

தியேட்டருக்கு வந்த பொதுமக்களுக்கு நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.  மேலும் அவர்கள் கையில் கிருமிநாசினி சானிடைசர் தெளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வராத பொதுமக்களுக்கு  தியேட்டர் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது.  முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் தமிழில் புது படங்கள் எதுவும் இப்போதைக்கு வெளிவராததால் ஆங்கில படம் திரையிடப்பட்டு வருவதாகவும், தமிழில் புது படங்கள் ஓரிரு நாளில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு  வந்ததும்  புது படங்கள்   திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Top