logo
புதுக்கோட்டையில் சில்லறை விற்பனையில் பலாப்பழம்  கடும் விலை உயர்வு..

புதுக்கோட்டையில் சில்லறை விற்பனையில் பலாப்பழம் கடும் விலை உயர்வு..

19/Apr/2021 12:43:49

புதுக்கோட்டை, ஏப்: முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும். கண் பார்வைக்கு உதவும் விட்டமின்- ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. 

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும். பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் சர்க்கரை  நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

 பலாப்பழத்திற்கு பண்ருட்டி பெயர் பெற்றது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, நெடுவாசல், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு தனிச்சுவை என்ற சிறப்பு பெற்றவை. 

இங்கு விளையும் பலாப்பழங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக  கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பலாப்பழங்கள் விற்பனை சரிவடைந்தது. இதனால் ஆங்காங்கே சாலையோரம் குறைந்த விலையில் பலாப்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்தனர். கடந்த சீசன் முழுவதும் உரிய விலை கிடைக்காமலேயே விற்பனை செய்தனர்.


இந்த நிலையில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. விற்பனைக்காக பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதி களில் விளையும் பலாப்பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று ஆங்காங்கே விற்பனை செய்து வருகின்றனர். 

அந்த வகையில் புதுக்கோட்டையில் பலாப்பழ விற்பனை ஆங்காங்கே கடைகளிலும், சாலையோரம் தள்ளுவண்டி கடைகளிலும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சாலையோரம் பல இடங்களில் பலாப்பழ விற்பனை நடந்தது. இந்த ஆண்டு சாலையோர கடைகளின் எண்ணிக்கை குறைந்துபோனது.  புதுக்கோட்டையில் ஒரு சாலையோர கடையில் பலாப்பழம் சுளை ரூ.10-க்கு 3 எண்ணிக்கையில் விற்பனை செய்யப் படுகிறது. இது சாதாரணமாக 10 ரூபாய்க்கு 6 முதல்  8 சுளைகள் வரை கிடைக்கும். தற்போது  விலை அதிகம்.  முழு பழத்தை அளவுக்கு தகுந்தாற் போல வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

 இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது பலாப்பழத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு முழு பழம் எடைக்கு ஏற்ப  ரூ.400 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டில் விற்பனை குறைந்ததால் விலை குறைந்திருந்தது.

தற்போது விவசாயிகளிடம் மொத்த வியாபாரிகள் பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால்  உள்ளூர் சில்லறை விற்பனைக்கு  பலாப்பழம் கிடைப்பதில்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ள காரணத்தால் பலாப்பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றனர்.


Top