logo
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில்  இன்று  24 இடங்களில் கடைகள் அடைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று 24 இடங்களில் கடைகள் அடைப்பு

22/Aug/2021 10:33:28

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில்  புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். 

அதன்படி,ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 

அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே. வி .ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும்.

கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 24 பகுதிகளில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும். இந்தப் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட இந்த பகுதிகளில் அனுமதியை மீறி யாராவது கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top