logo
புதைசாக்கடைத்திட்ட வீட்டு இணைப்புக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படுமா?

புதைசாக்கடைத்திட்ட வீட்டு இணைப்புக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படுமா?

05/Oct/2020 11:42:32

புதுக்கோட்டை: பாரீஸ்-புதுச்சேரி ஆகிய நகரங்களை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதுக்கோட்டை நகரில்  புதை சாக்கடைத்திட்டத்துக்கு வீடுகளில் இணைப்புக் கொடுக்கும் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள்  பல பகுதிகளில் சரிவர மூடப்படாத நிலை நீடிப்பது அப்பகுதி மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தொண்டைமான் மன்னராட்சி காலத்தில் புதுச்சேரி மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் அமைப்பை முன்மாதிரியாகக்கொண்டு  நகரின் நடுவில் அமைந்திருந்த மன்னர் அரண்மனையை மையமாக வைத்து நான்கு திசைகளிலும் தலா 4 அடுக்கு முறையில் மொத்தம் 16 வீதிகள் அமைக்கப்பட்டன. மழை நீரை குடிப்பதற்கும் விவசாயத்தும் சேமிக்கும் வகையில்  மேட்டுபகுதியான மச்சுவாடியில் தொடங்கி   காட்டுப்புதுக்குளம் (புதிய பேருந்து நிலையம்) வரை ஏறத்தாழ 42 குளங்களும், அவற்றில் நிரம்பும் உபரி நீர் மற்றொரு குளத்துக்குச் சென்று வரிசையாக நிரம்பும் வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டனமேலும், மழைநீர் கால்வாய்கள் குடியிருப்புகளின் முன் பகுதியிலும், கழிவு நீர் கால்வாய்கள் பின்புறமும் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக எவ்வளவு அதிகமான மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ நீர் தேங்குவதில்லை

இந்நிலையில், பிற நகரங்களைப் போல புதை சாக்கடைத்திட்டத்தை கொண்டுவந்தால்தான் சுகாதாரப்பிரச்சினை தீரும் என்ற கோரிக்கை  எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2006 -ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ 32 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதை சாக்கடைத்திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த .2008 -ல் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடு்த்து கடந்த 2009 -ல் திருத்திய மதிப்பீடு செய்து  மேலும் ரூ 17 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ 49 கோடி ஆகும்.

இத்திட்டத்தில், 159 கிமீ நீளத்துக்கு பூமியில் குழாய் பதிப்பது, 5,484 ஆள் நுழைவு தொட்டிகள் அமைப்பது, 10.62 எல்.எம்.டி கொள்ளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பணிகள் முடிவடைந்து திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து வீடுகளுக்கு இணைப்புக் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

 புதுக்கோட்டை நகரின் அனைத்து வீதிகளிலும், வீடுகளுக்கும் புதைசாக்கடையில் இணைப்பு கொடுப்பதற்காகத் தோண்டப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் கிடக்கின்றன. இதனால் நாள் தோறும் விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு பேரங்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக  பாலம் அமைப்பதற்கு  தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் இருக்கும்  நிலை தொடர்கிறது.

அதற்குப் பக்கத்தில் படத்தில் உள்ளபடி சாலையில் உள்ள இரண்டு பள்ளங்களால். ஒவ்வொரு நாளும் விபத்து நடப்பது வேதனையான  நிகழ்வுநகராட்சி அலுவலர்கள் பலரும் இதன்வழியே நின்று நிதானித்து  கடந்து செல்கின்றனர் என்பது விந்தையான நிகழ்வு. எனவே, நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Top