logo
நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

11/Aug/2021 09:48:35

சென்னை, ஆக: தமிழகத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள தடவல் மாதிரிகள் சேகரிக்கப்படுவதை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முதலமைச்சரின் உத்தரவின் படி கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரியும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து ஆலப்புழா விரைவு ரெயிலில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தடவல் மாதிரிகள் சேகரிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 5-ஆம்  தேதி முதல் கேரளாவில் இருந்து வரும் விமானம், ரெயில்களில் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ,கடந்த 5 நாட்களில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 277 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்கள், 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களை தவிர்த்து கேரளாவில் இருந்து வரும் மற்ற அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் புதுதில்லி சென்றிருந்த பொழுது பிரதமரை நேரடியாக கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து அனுமதி வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக்கல்லூரி களில் தலா 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த ஆண்டே சேர்க்கை வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 7 புதிய மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 87 ஆயிரத்து 240 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன. இதில் 2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 731 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் கையிருப்பில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 196 தடுப்பூசிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் அதாவது 20 லட்சத்து 47 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், சி.எஸ்.ஆர். நிதி உட்பட பல்வேறு வழிமுறைகளில் 17 லட்சத்து 16 ஆயிரத்து 561 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை அரசின் சார்பிலும் தனியார் மருத்துவமனைகளின் சார்பிலும் 2 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 793 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ். மனீஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், ரயில்வே கோட்ட மேலாளர் பி. மகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். 


Top