logo
புதுக்கோட்டையில் அரை நூற்றாண்டு காலமாகத் திகழ்ந்த   அரசு பொது அலுவலக வளாகம்...  ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகமாக மாறியது

புதுக்கோட்டையில் அரை நூற்றாண்டு காலமாகத் திகழ்ந்த அரசு பொது அலுவலக வளாகம்... ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாறியது

10/Aug/2021 12:07:48


புதுக்கோட்டை, ஆகஸ்ட்: புதுக்கோட்டையில் கடந்த அரை நூற்றாண்டுக ளாக இருந்து வந்த  அரசு பொது அலுவலக வளாகம்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக  தற்போது மாறியுள்ளது.

தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஓராண்டு கழித்து 3-3-1948 ஆம் ஆண்டு  இந்தியாவுடன்புதுக்கோட்டை சமஸ்தானம்  முறைப்படி  இணைக்கப்பட்டது.

 இந்தியா முழுவதும்  மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ்நாடு மாநிலம் உருவானது. அதில் இடம் பெற்றிருந்த ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டம் இருந்து வந்தது. இதன் பின்னர் கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி அப்போதிருந்த தமிழக முதல்வர் கருணாநிதியால் ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக  அறிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின் 15 -ஆவது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது.


அன்று முதல்  தற்போதைய பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நீதிமன்றங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட கருவூலம் அரசு அச்சகம் அறநிலையத்துறை அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம் ஆகியவை   ஒரே வளாகத்தில்  செயல்பட்டு வந்ததால்,  இந்த வளாகம் அரசு பொது அலுவலக வளாகமாகத்திகழ்ந்து  வந்தது.

சுமார் 22 ஏக்கரப் பரப்பளவிலான இந்த வளாகம்  புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், தனியார் அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு பேரணிகள், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் ஊர்வலம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த வளாகத்திலிருந்துதான் தொடங்கப்படும்.


இந்நிலையில், இந்த வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தின் நூற்றாண்டு விழா கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடந்தபோது , விழாவுக்கு வந்திருந்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் பலரும் இந்தக்கட்டிடத்தின் நேர்த்தியை பார்த்து வியந்தனர்.

மேலும், சென்னை  உயர்நீதிமன்றத்துக்கு இணையான கட்டிட அமைப்பைக்கொண்டுள்ளதாகவும் பாராட்டினர். அந்த விழாவில் அப்போதைய சட்ட அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் இந்த வளாகத்தை நீதிமன்றத்தின்  பொறுப்பில் ஒப்படைக்க வேண்டுமென நீதிபதிகள்  வலியுறுத்திப் பேசினர். 

இதைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக  மேற்கொள்ளப்பட்டன. இங்கிருந்த அரசு அலுவலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காலி செய்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தன.  இந்தப்  அலுவலக வளாகத்தில்  வடக்குப்பகுதியில் இயங்கி வரும் அரசு கருவூலம் அரசு அச்சகம் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இன்னும்  இடமாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில்,  பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் இந்த வளாகம்  தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பல்வேறு அலுவலகங்கள் இயங்கியதால் மாவட்ட மக்களால்  பொது அலுவலக வளாகம் என்று அழைக்கப்படுவது முடிவுக்கு வந்துள்ளது. இனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக இனிமேல் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


Top