logo
இன்றைய சிந்தனை..அலைபாயும் மனம் - டாக்டர் பஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

இன்றைய சிந்தனை..அலைபாயும் மனம் - டாக்டர் பஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

05/Oct/2020 09:45:27

அமைதியான நிம்மதியான மனநிலை என்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் சாத்தியமா?! என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், ஏன் தனிமையில் இருந்தாலும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து மகிழ்ச்சியற்று தவிக்க வைக்கும் மனதிற்கு மருந்து உண்டா இது பலரின் புலம்பல்,

 ங்கள் விருப்பத்துக்கும் நீங்கள் இருக்கும் சூழலுக்குமான இடைவெளியே   உங்கள் தவிப்புக்கான மூலகாரணம். இது எனக்கானது அல்ல. இது அல்ல நான் என்ற நினைப்பும், என்னை நானாக இல்லாமல் மாற்றி விடுமோ இந்த சூழல், என்ற துடிப்பும் பெரும்பாலும் மனதை அலை பாய செய்கிறது.

 தான் என்ன செய்தாலும் 47 சதவீதம் அளவு மனது செய்யும் வேலையை விட்டும் வேறு எதிலாவது தாவுகிறது என்கிறது ஆய்வுகள். அப்படி கூடு விட்டு கூடு பாயும் மனம் திக்கு தெரியாமல் சுழன்று மகிழ்ச்சியற்று தவிக்கத் தொடங்கி விடுகிறது.

எதையோ நோக்கிய ஒரு தேடல் ஒரு பயணம் இது தான் வாழ்க்கை. இந்த தேடல், சொந்த வீடு, நல்ல வேலை, பதவி, புகழ், நல்ல உறவுகள் என ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக இருந்தாலும் அதன் அடி நாதம் மகிழ்ச்சிக்கான தேடல் மட்டுமே.

 அரிஸ்டாட்டில் மகிழ்ச்சியை “the chief good“ என்கிறார். பாதை எதுவாக இருந்தாலும், அதற்கான பயணம் எந்த வகையில் இருந்தாலும் வாகனம் எதுவாக இருந்தாலும், அந்த பயணத்திற்கான குறிக்கோளும் இலக்கும் மகிழ்ச்சி என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. எந்த ஒரு பொருளோ பதவியோ, பயணமோ அல்லது உறவோ எது என்றாலும் அது மதிப்பு மிக்கது என்பதை விட அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் எனும் நம்பிக்கையில் தான் நாம் அவற்றை அடைய விரும்புகிறோம். அந்த எதிர்பார்ப்பில் தான் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

 ஆனால் நினைத்தது எல்லாம் கிடைத்தாலும் மகிழ்ச்சி மட்டும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு தானிருக்கிறது. படிப்போ பதவியோ பணமோ எதுவானாலும் அது கிடைத்த பின்பும் உங்களுக்குள் மகிழ்ச்சி நிரந்தரமாகவில்லையென்றால் உண்மையில் மகிழ்ச்சி வேறு எதில் தான் ஒளிந்திருக்கிறது என்பது ஒரு சவாலான கேள்வியாக இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகள் பல ஆராய்ச்சிகளுக்கு ஆளாகி வருகிறது.

 நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், நம் சுற்றம் சூழல் எப்படி இருக்கிறது, நாம் பாஸிட்டிவான சிந்தனையுடன் இருக்கிறோமா என்பதில் நம் மகிழ்ச்சி சார்ந்திருக்கிறது என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் இதை ஆராய்ச்சியாளர்களால் உண்மையில் எல்லா வகையிலும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் ஆய்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது.

 சமீபத்தில், மனிதர்கள் யாரோடு இருக்கும்போது அல்லது எது செய்யும்போது அல்லது எதை அடையும் போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சிக்கான சூத்திரத்தை கண்டறிய மேலை நாட்டில் ஒரு நீண்ட ஆராய்ச்சி நடந்தது. பல நாடுகளிலிருந்தும், பலதரப்பட்ட பல்லாயிரம் பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மகிழ்ச்சியின் அளவை நிர்ணையிக்கும் போது நிமிடத்திற்கு நிமிடம் கூட அல்ல நொடிக்கு நொடி அது மாறுபட்டுக் கொண்டே இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் அவர்களது மனம் அவர்கள் செய்யும் வேலையில் ஆழ்ந்து இருக்கிறதா அல்லது வேறு எதிலாவது அலை பாய்ந்து கொண்டிருக்கிறதா. அப்படி வேறு நினைவுகளில் இலயித்து இருந்தால் அது எத்தகைய நினைவு, அது மகிழ்ச்சியான நிகழ்வா அல்லது சங்கடமான நினைவுகளா அல்லது இரண்டுக்கும் பொதுவான சாதாரணமான நினைவுகளா போன்ற கேள்விகள் அந்த ஆய்வுகளில் கேட்கப் பட்டது. அத்துடன் இறுதியாக அந்த நேரத்தில் அவர்கள் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதும் குறித்துக் கொள்ளப் பட்டது.

எந்த ஒரு வேலையையும் செய்யும் போது அதிலேயே கவனமோடு இருக்கும் போது மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. அதாவது வேலை அத்தனை விருப்பமானதாக இல்லாவிட்டலும் அதில் மூழ்கி செய்யும் போது அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது

அப்படி இல்லாத நேரங்களில் பெரும்பாலும் மனித மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது, இது வேறு எந்த படைப்பினங்களுக்கும் இல்லாத ஒரு குணம். அதனால் யாருடன் இருந்தாலும் எது கிடைத்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் அலை பாயும் அந்த மனம் அந்த நொடி எதை சிந்திக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியின் அளவும் மாறிக் கொண்டே இருக்கிறது என்கிறது ஆய்வின் முடிவு.

ஒருவர் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரம் அவர் மனம் நேற்று நண்பருடன் நடந்த சம்பாஷனைகளை நினைக்க தொடங்கும், அடுத்த நொடி ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என அங்கலாய்க்கவும் செய்யும்,

அப்படி அலை பாயும் மனதை வரமாகவும் சாபமாகவும் மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. இப்படி மனம் அலை பாய்கிறதே என்று அதனை ஒரு குறையாக எண்ணாமல், இப்படி ஒரே நேரத்தில் பல விஷயங்களை சிந்திக்கக் கூடிய திறமை மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அதனை ஒரு கூடுதல் திறமையாக எண்ணிப் பாருங்கள் என்கிறது மனஇயல்

மனதின் இந்த அலைபாயும் இயல்பை வைத்து நம் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்து விடலாம். சந்தோஷமான தருணங்களில் கூட வருந்தக் கூடிய நினைவுகளில் மனதை அலை பாய விடாமல் ஏதாவது சங்கடமான நேரத்தில் கூட சந்தோஷமான விஷயங்களில் மனதை அலை பாயவிட்டால் அது மகிழ்ச்சியை தக்க வைக்கும். ஏனென்றால் மனம் அலை பாயும் போது பொதுவாக தேவையற்ற விஷயங்களையே நினைக்கிறது. தான் விரும்பி நடக்காத ஒன்றிற்காக ஏங்குகிறது. நடந்த ஒன்றிற்காக வருந்துகிறது. செயலோடு எண்ணம் ஒன்று படாமல் அலை பாயத் தொடங்குவதால் செயலும் மகிழ்ச்சியைத் தராமல் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சாதரணமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது எழ வேண்டும் என்றால் சட்டென்று எழுந்து விடுவீர்கள். இப்போது ஒரு சிறு விளையாட்டை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பரை உங்கள் எதிரே நின்று கொண்டு உங்கள் நடு நெற்றியில் ஒற்றை விரலை வைத்து தொட்டுக் கொண்டிருக்கச் சொல்லுங்கள். நண்பரின் விரல் உங்கள் நெற்றியில் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கம் போல் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அது எளிதில் சாத்தியமில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மெல்லிதாக தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு விரல் நுனி உங்களின் முழு உடலையும் விட வலுவானதா. நிச்சயம் இல்லை. ஆனால் அது உங்கள் உடலின் ஆதி மையத்தை அசைய விடாமல் செய்து உங்களை செயலிழக்கச் செய்து விடும். அதுபோல்தான் அலை பாயும் உங்கள் எதிர்மறை எண்ணங்களும் உங்கள் மகிழ்ச்சியின் மையத்தில் கை வைத்து அதை உங்களால் உணரவிடாமல் செய்து விடும்.

எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்தால் மனம் அதில் இலயித்து விடும். வேலையும் சிறப்பாக அமையும் மகிழ்ச்சியும் உங்கள் மனதில் நிறையும். சில பொழுதுகளில் உங்கள் மனம் அலைபாயத் தொடங்கினால் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு ஒரு தேர்ந்த கலபந்தாட்ட வீர்ர் போல் அதை விரட்டி மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் செலுத்துங்கள், மகிழ்ச்சியான மன நிலை உங்கள் வேலையை திறம்பட செய்வதற்கான ஆற்றலைத் தரும். மகிழ்ச்சி மலரும்.

 

Top