logo
பொன்னமராவதி அருகே  கருகப்பூலாம்பட்டியில் பகுதிநேர நூலகம்: அமைச்சர் எஸ்.ரகுபதி திறப்பு

பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் பகுதிநேர நூலகம்: அமைச்சர் எஸ்.ரகுபதி திறப்பு

09/Aug/2021 10:30:21

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், தேனூர் ஊராட்சி, கருகப்பூலாம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொது நூலகத்துறையின் சார்பில்  அமைக்கப்பட்ட பகுதிநேர நூலகத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி (08.08.2021) திறந்து வைத்து பார்வையிட்டார். 

பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கருகப்பூலாம்பட்டியில் பகுதிநேர நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், மாணவர்கள், இளைய சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காகவும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 1,000 புத்தகங்கள் உள்ள இப்பகுதிநேர நூலகம் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகமாக வளர்ச்சி பெறும். இந்த நூலகத்தின் வளர்ச்சி என்பது இப்பகுதி மக்களின் வளர்ச்சியாகும். 



 அலைபேசி மூலமாகவோ அல்லது மற்ற சாதனங்கள் மூலமாகவோ படித்து தெரிந்து கொள்வதைவிட நூலகத்திற்கு நேரடியாகச் சென்று புத்தகம் வாசிப்பதால், தங்களது  பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். 

முன்னாள் முதல்வர்  கலைஞருக்கு  மிகவும் பிடித்த இடம்  நூலகம் ஆகும். இளமைப் பருவத்திலேயே மாணவநேசன் என்ற கையெழுத்து பத்திரிக்கையை தொடங்கி, பின்னர் முரசொலி பத்திரிக்கையாக நாட்டு மக்களுக்கு வழங்கியவர். தனது எழுத்தாற்றலால் பல புத்தகங்களையும், திரைப்படங்களையும், நாடகங்களையும் நாட்டு மக்களுக்கு வழங்கி, சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் கலைஞர்.

கருகப்பூலாம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பகுதிநேர நூலகம் கொப்பனாப்பட்டி கிளை நூலகத்துடன் இணைந்து செயல்படும். இந்த நூலகத்திற்கு இப்பகுதி தன்னார்வலர்கள் அதிக அளவு புத்தகங்கள் வாங்கித் தர முன்வர வேண்டும். தினசரி நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிக்கைகளும் இந்நூலகத்தில் உள்ளதால், இப்பகுதி பொதுமக்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். 

முன்னாள் முதல்வர்  கலைஞரால் ஏற்கெனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் இந்தியாவிலேயே சிறப்பான நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது.  அதைப் போலவே மதுரையில் கலைஞர் நூலகம் சிறப்பாக அமைந்திட முதல்வர் ஸ்டாலின்  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழக அரசு  நூலகங்களின் வளர்ச்சிக்கு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகினன்றன என்றார் அமைச்சர் ரகுபதி.

பின்னர், கருகப்பூலாம்பட்டி பகுதிநேர நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிட உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் ரூ.10,000 நிதியினை  மாவச்ச நூலகரிட் அமைச்சர் வழங்கினார். மேலும் பகுதிநேர நூலகத்தின் புரவலராக ரூ.1,000 நிதியளித்து  தன்னை இணைத்துக்கொண்டார் அமைச்சர்.

இதில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் அ.அடைக்கலமணி, வட்டாட்சியர் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதாசிவம், வெங்கடேசன், ஊராட்சிமன்றத் தலைவர் கிரிதரன், நூலகர்கள் முத்து, ராமகிருஷ்ணன், கரியநாயகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Top