logo
ஈரோடு அருகே ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்திய  தொழிலாளி கைது

ஈரோடு அருகே ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்திய தொழிலாளி கைது

07/Aug/2021 07:17:14

ஈரோடு, ஆக: ஈரோடு அருகே ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்திய  தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளி மாநிலம், வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.  இதேபோல், ஈரோடு மாவட்டத்தில்  தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு  ரேஷன் அரிசியை கடத்தி அவர்களிடம் அதிக விலைக்கு விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  ரங்கம்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த வேனில் ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த தனசேகர் (41) என்பவரை குடும்ப பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பெருந்துறை பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் கூடுதல் விலைக்கு ரேசன் அரிசியை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி  சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து ஆயிரம் கிலோ ரேசன் அரிசியும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Top