logo
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியர் ஆய்வு

02/Aug/2021 05:46:38

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (2.8.2021) நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

 பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கோவிட் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 31.07.2021 அன்று சென்னையில் தமிழக முதல்வரால்கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைச்சர்களால் ஞாயிற்றுக்கிழமை  கொரோனா விழிப்புணா;வு ஒருவார கால தொடர் பிரசாரம் தொடக்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது மக்களுக்கு கைகளை கழுவுவதற்கான 8 படிநிலைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 


மேலும், கொரோனா விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி  வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  விழிப்புணர்வு (ஹீலியம்)பலூனும் பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் கை கழுவும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நடனமும் மற்றும் கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு கோலங்களும் போடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பிரசாரம் 1.8.2021 முதல் 7. 8.2021 வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. 

அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இணைய வழியில் ஓவியப்போட்டி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்துதல், உள்ளூர்  தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் விளம்பரம் செய்தல், குறும்படங்கள் வெளியிடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஒருவார காலத்திற்கு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூகஇடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி  எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதாராமு.

 இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top