logo
ஈரோட்டில் 2 வாரங்களுக்கு பிறகு  52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி

ஈரோட்டில் 2 வாரங்களுக்கு பிறகு 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி

01/Aug/2021 10:29:18

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  2 வாரங்களுக்கு பிறகு  52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற  கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி போடும் முகாம்களில் மக்கள் திரண்டதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான பேர் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 

இதனால், கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி போட மையங்களில் இரவிலேயே வந்து குவிய தொடங்கினர். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வாக்காளர் அடிப்படையில் நிலை அலுவலர்கள் வீடு வீடாக டோக்கன் விநியோகித்து,  அதனடிப்படையில் தடுப்பூசி  போடப்பட்டு வருகிறது. எனினும் சமீப காலமாக கோவிஷில்டு தடுப்பூசி மட்டும் போடப்பட்டு வந்தது. ஆனால் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக போடப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 21 ஆயிரம் பேர் கோவேக்சின்  முதல் டோஸ் செலுத்தி இரண்டாம்  டோசுக்காக  காத்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று கோவேக்சின் 2-ஆவது டோஸ் தடுப்பூசி ஈரோடு மாவட்டம் முழுவதும் சிவகிரி ,மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, சிறுவளூர்,ஜம்பை ,சித்தோடு, குருவரெட்டியூர், டி.என்.பாளையம் புளியம்பட்டி  உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டது. சனிக்கிழமை மட்டும் 7 ஆயிரத்து 800 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது. 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.  இந்நிலையில், காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று இரவு தடுப்பூசி போட மக்கள் திரண்டு விட்டனர். 

200 பேருக்கு போட வேண்டிய இடத்தில்  500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் கொடுத்த பின்னர்  தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மற்றவர்களுக்கு அடுத்த முறை வரும்போது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். 


Top