logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

01/Aug/2021 10:11:26

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து  பொதுவெளியில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.  மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே  நடமாடத்  தொடங்கி விட்டனர். முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இது போன்ற இடங்களில் அரசு அறிவித்துள்ள கொரோனா  பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படு வதில்லை என்ற  புகார் எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான  முக்கிய உயிர்க்கவசமாக முக கவசம்  இருந்து வருகிறது. தற்போது முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வருகின்றனர். 

இதனால் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ஆங்காங்கே அபராதம் விதிக்கப்பட்டு  வந்தது. இந்நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  கட்டாயமாக அபராதம் விதிக்கும்  நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள்  திருவெங்கடசாமி வீதி, கனி மார்க்கெட், பன்னீர்செல்வம் பார்க் போன்ற பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு உடனடியாக தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. காலை முதல் மதியம் மட்டும் இந்த பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ .200 அபராதம் விதிக்கப்பட்டது.

நகர் நல அலுவலர் முரளி சங்கர், டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் உடன் வந்திருந்தனர். தொடர்ந்து மாநகர் பகுதி முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு  வருகிறது. இதேபோன்று கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Top