logo
ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 140 பேருக்கு தொற்று:  சமூக இடைவெளி கேள்விக்குறியானதால்  அதிகரிக்கும் கொரோனா

ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 140 பேருக்கு தொற்று: சமூக இடைவெளி கேள்விக்குறியானதால் அதிகரிக்கும் கொரோனா

30/Jul/2021 11:12:59

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் மேலும் 140 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.  சமூக இடைவெளி கேள்விக்குறியானதால்  கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ஆம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் அலையில் குழந்தைகள், இளைஞர்கள், வயதான முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் வயது பேதமின்றி தாக்கியது. உயிர் இழப்பும் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வயதான முதியவர்கள் அதிக அளவில் இறந்தனர். போலீசார் மருத்துவர்கள் என முன்கள பணியாளர்களும் பலர் உயிரிழந்தனர்.

 இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர், மாநகராட்சி யுடன் இணைந்து மேற்கொண்டனர். தினசரி கொரோனா  பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தினமும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேலும், மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சளி காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் தோற்று வராமல் குறைய தொடங்கியது. கடந்த ஒன்றரை மாதமாக தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. இதற்கிடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது. பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. தற்போது மாவட்டத்தில் மக்கள் முறையாக முக கவசம் அணியாமல் வருகின்றனர். பொது இடங்களிலும் சமூகஇடைவெளி  கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக கடை விதிகளுக்கு சென்று விடுகின்றனர். பஸ்களிலும் நின்று கொண்டே பயணம் செய்து வருகின்றனர்.

 இதுபோன்ற காரணங்களால் தற்போது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு 127 ஆக இருந்த தினசரி பாதிப்பு. நேற்று முன்தினம் 132 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம்(28.7,2021)  சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, தினசரி பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் மட்டும் தினசரி பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஈரோட்டில் இதுவரை தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்து 207 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 186 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 1351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 2 நாட்களாக தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Top