logo
ஈரோட்டில் ரூ.35 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்களுக்கு ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் ரூ.35 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்களுக்கு ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

30/Jul/2021 10:57:43

ஈரோடு, ஜூலை: ஈரோட்டில் ரூ.35 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் உட்பட 82 புதிய திட்டங்களை செயல்படுத்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக  வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மாருதி நகரில் பல்வேறு திட்டங்களுக்காக தோண்டப்பட்டு பழுதாகி இருந்த சாலைக்கு பதிலாக புதிய தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.

மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து திண்டல் லட்சுமி நகரில் புதியதாக அமைய உள்ள தார் சாலை பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சோலார் பகுதியில் பிரம்மாண்ட முறையில் அமைய உள்ள ஈரோடு புதிய பஸ் நிலையம் பணிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி  மேலும் கூறியதாவது: 

ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்கெனவே  பஸ் நிலையம் இருந்தால் கூட  இன்றைய சூழ்நிலையில் பற்றாக்குறையாக உள்ளது. பற்றாக்குறை என்பதைவிட போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதனால் சோலாரில் உள்ள ஏறத்தாழ 54 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. அதில் 15 முதல் 20 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து முயற்சி செய்து வருகிறோம்.

அவ்வாறு சோலாரில் பஸ் நிலையம் வரும் போது ஏற்கெனவே இருக்கிற பழைய பஸ் நிலையம் நகர பஸ் நிலையமாக செயல்படும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது ஒரே மாதிரி பஸ் நிலையமாக ஒரு மாதிரி மார்க்கெட்டாக அமைய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். மஞ்சள் வளாகத்தை இன்னும் பெரிய அளவில் 15 ஏக்கரில் ஏற்படுத்தி தரப்படும். 

விளையாட்டு துறை முன்னேற்றத்திற்காக ரூ .35 கோடி மதிப்பில் ஒரு திட்டம் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம். சட்டக் கல்லூரி  கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஏறத்தாழ 82 திட்டங்களை வகுத்துள்ளோம். இத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 

காவல்துறைக்கு பல புதிய திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். டெக்ஸ்டைல்ஸ் யூனிவர்சிட்டி ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குண்டான இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 

ஈரோட்டிலிருந்து போகக் கூடிய அனைத்து சாலைகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்து விடுகிறோம். குடிசைகள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும். அம்பேத்கர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகி குமரன் பெயரில் ஒரு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலையம் ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கபடும். 

துணை நகரம், ஆட்டோ நகரம் இப்படி நிறைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முதல்வர் இந்தத் திட்டங்களை காலதாமதமின்றி விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்னும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நான்கு பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டு உள்ளது. 

மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக தனியாக வாட்ஸ் அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் செயலில் இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .மீதமுள்ள  24 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் முத்துசாமி.

Top