logo
நாட்டின்  முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள் பெண்ணினத்துக்கு பெருமை

நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள் பெண்ணினத்துக்கு பெருமை

30/Jul/2021 07:18:13

புதுக்கோட்டை, ஜூலை : நா ட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி அம்மையாரின்(30.7.1886)  பிறந்த நாளில் அவர் பிறந்த மண் என்பதில் புதுக்கோட்டை  பெருமை கொள்கிறது.


மண்ணின் பெருமை, விண்ணின் பெருமையைவிட பெண்ணின் பெருமை பெரிது. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்ய வேண்டும் என கவிமணி பாடியதன் காரணமும் அதுவே. அறிவில் ஆற்றலில் ஓங்கி அகிலப்புகழ் பெற்ற பெண்ணினம் இடைக்காலத்தில் ஆமையாய், ஊமையாய், பொட்டுப்பூச்சியாய் கருதப்பட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிற அவல நிலையை அடைந்தது. இந்த இடைக்கால இருட்டை நீக்கி, புதிய விடியலைப்படைத்து, புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப்பணியில் ஈடுபட்ட மாதர் குல மாணிக்கங்கள் தமிழகத்தில் மிகச்சிலரே. அந்த மிகச் சிலரில் தலையாய இடம் பெறும் தகுதி பெற்றவர் ஒருவர் உண்டென்றால் அவர் டாக்டர்முத்துலெட்சுமி(ரெட்டி) அம்மையார் என்றால் மிகையில்லை. 


கடந்த 30.7.1886 -ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப்பிறந்தார் முத்துலெட்சுமி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்த காலக்கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப்பள்ளி தொடங்கிய தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலெட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார்.  ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை, உள்ளூர் கல்லூரியிலோ பெண்களை சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.  

இச்சூழலில்,  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர கடந்த 4.2.1904 -இல் விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த பழமைவாத அதிகாரிகளில் சிலர்  இதை கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெறுவதில் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையு்ம் கொண்ட அப்போதை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு முத்துலெட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

 அதில் வெற்றி பெற்ற பின். சிறிது காலம்  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கல்வி தடைபட்டது. மேலும் அவரது தாயாரும் நோயால் சிரமப்பட்டு இறந்து போனார். நோயும் அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால்  மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம்  எழுந்தது.

இதைத் தொடர்ந்து 1907 -ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலெட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சான்றிதழ்களும், தங்கப்பதக்கங்களும் பெற்று 1912 -ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலுரெட்டியின் சகோதரி மகனான மருத்துவர் சுந்தரரெட்டியை 1914 -ல் திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து மருத்துவ தம்பதியர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினர்.

தொடர்ந்து,  விடுதலைப் போராட்டத்திலும், மகளிர் உரிமைக்கான இயக்கங்களிலும் முத்துலெட்சுமிரெட்டி ஈடுபாடு கொண்டார். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இவருக்கு உறுதுணையாக நின்றார். 1929-ல் இந்திய மாதர் சங்கம் பெண்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென போராடியதன் விளைவாக முத்துலெட்சுமிரெட்டி சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினரானார். துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவையில் நுழைந்த முதல் பெண்மணியும், உலகிலேயே சட்டப்பேரவையின்  துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.


சமுதாயத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயில்களில் தேவதாசிகள் என்ற பெயரில் இழிவு படுத்தப்படு வதை தடை செய்யும் சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றினார். பால்ய விவாக தடைச்சட்டம், பாலியல் தொழில் தடைச்சட்டம் கொண்டுவர இவர் பெரும் முயற்சி எடுத்தார்.

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் கடந்த 1930 -இல் அவ்வை இல்லத்தை நிறுவினார்.  புற்று நோய் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1936 -இல் மாபெரும் இயக்கத்தை நடத்தி இதற்கென தனி மருத்துவமனையை அமைக்க வேண்டுமென முயன்று சென்னை அடையாறி்ல் கடந்த 1954 -இல் புற்று நோய் மருத்துமனையை தொடங்கினார். இன்று ஆசியாவிலேயே புகழ்மிக்க புற்றுநோய் மருத்துவமனயாக அது திகழ்கிறது. அவ்வை இல்லமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் டாக்டர் முத்துலெட்சுமி(ரெட்டி) அம்மையார் மனித இனத்துக்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து.

இத்தனை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிந்தனை, மூச்சு, செயல் அனைத்தையும் பெண்கள் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்த டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி  பிறந்த பெருமை கொள்கிறது புதுக்கோட்டை மண். நவீன காலத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண் டாக்டர்முத்துலெட்சுமி(ரெட்டி) அம்மையாருக்கு 30.7.2021 -ஆம்  தேதி அவரது பிறந்தநாள் வரும் வேளையில், அவரது பெயர் சூட்டப்பட்ட புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்முத்துலெட்சுமி(ரெட்டி) அம்மையாரின் உருவச்சிலையை நிறுவுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.  


Top