logo
குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

28/Jul/2021 05:28:59

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும்பாதுகாப்பு)  சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர்(ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக,  பின்வரும் தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும், 

அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும்  விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். 

ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை புதுக்கோட்டை மாவட்ட www.pudukkottai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

மேற்கண்ட பதவிக்கு   தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தை 13-8-2021 -ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படைவீரர் நல அலுவக வளாகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம்- 622 002 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. 

Top