logo

பெருந்துறையில் கைத்தறி, தொழில் முனைவோர், மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்தாலோசனை.

07/Jan/2021 10:48:28

 ஈரோடு:  பெருந்துறையில்  நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம்,தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் வரவேற்றார்.  

கூட்டத்தில் நெசவாளர்கள் தரப்பில் பேசுகையில், பசுமை வீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நெசவாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் உதவித்தொகை  ரூ.1000 வழங்கப்படுவதை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

அவிநாசி அத்திகடவு திட்டத்தில் சில பகுதிகளில் உள்ள குளங்கள் விடுப்பட்டுள்ளதால் அதை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதே போல நாயக்கர் சமுதாயத்தினருக்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் மாவட்டத்தில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நாயக்கர் சமுதாய நிர்வாகிகள் தரப்பில் பேசினர். 

பின்னர் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, பெருந்துறை தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு பல கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. குறிப்பாக அவினாசி அத்திக்கடவு திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள மின்கேபிள் திட்டம், அரசு பாலிடெக்னிக், பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, சாலை வசதிகள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 பல்வேறு சமூகத்தினரும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றோம். தொழில் முதலீட்டாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு எவை எல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Top