logo
மாணவர்கள் மனங்களில் நல்மாற்றங்களை  நிகழ வைப்பவர் ஆசிரியர்கள் தான்: கவிஞர்தங்கம்மூர்த்தி

மாணவர்கள் மனங்களில் நல்மாற்றங்களை நிகழ வைப்பவர் ஆசிரியர்கள் தான்: கவிஞர்தங்கம்மூர்த்தி

26/Jul/2021 06:49:06

புதுக்கோட்டை, ஜூலை: மாணவர்கள் மனங்களில் நல்மாற்றங்களை  நிகழ வைப்பவர் ஆசிரியர்கள் தான் என்றார் கவிஞர்தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது பட்டமளிப்பு விழாவில் 206 ஆசிரிய மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:

பெருந்தொற்றின் பேரிடர் காலத்தில் வாழ்கிறோம். தடுப்பூசி உயிருக்கு உத்தரவாதம் தருகிறது. கல்வி நம்உயர்வுக்கு உத்தரவாதம் தருகிறது. எத்தனையோ ஆயுதங்கள் இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அனைத்தையும் எதிர்கொள்கிற ஆற்றல் மிக்க பேராயுதம் கல்வி.  

மனதை புண்படுத்துகிறது  சமூகம் .மனதை பண்படுத்துகிறது கல்வி. புற அழகை அதிகரிக்க ஏராளம் பொருட்கள் அணிவகுத்து நிற்கின்றன. அக அழகை அதிகரிப்பது கல்வி மட்டுமே. வாசல் கோலம் வரையக் கற்றுத் தருவதா கல்வி. இல்லை வாழ்க்கைக் கோலம் வரையக் கற்றுத் தருவதே கல்வி.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைகளாகவே நினைப்பார்கள். அவர்களை மனிதனாக மாற்றுகிற மகத்துவம் நிறைந்தவர்களே ஆசிரியர்கள். மாணவர்கள் மனங்களில் நல்மாற்றங்களை  நிகழ வைப்பவர் ஆசிரியர்கள் தான்.

தொழில்நுட்ப புரட்சிகளில் இயந்திரங்களோடு இயந்திரங்களாக மாணவர்கள் மாறிவிடாது.  நல்ல இதயங்கள் நிறைந்தவர்களாக அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. இணையவழிக் கல்வியை விட இதய வழிக் கல்வியே மேன்மை மிகுந்தது என்றார் தங்கம் மூர்த்தி.

விழாவுக்கு, ஸ்ரீ பாரதி கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். தாளாளர் ரெ. பாலகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர்கள் அ. கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல். செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளங்கலை கல்வியியலில் 175, முதுகலையில் 31 மொத்தம் 206 ஆசிரிய மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த எஸ். பிரியா,பி. பிரியதர்ஷினி, ஏ. பிரியங்கா ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் தி. சந்திரமோகன் ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் துணை முதல்வர் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினார்.

Top