logo
ஈரோடு மாவட்டத்திலுள்ள   பவானிசாகர் அணைக்கட்டு 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணைக்கட்டு 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

25/Jul/2021 11:08:06

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை. 3000 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற புகழைப் பெற்றுள்ளது. இந்த  அணையின் மூலம்,   ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளம் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக நேற்று முன்தினம் மாலை வருவாய் துறையினர் பவானிசாகர் அணையிலிருந்து எந்த நேரமும் உபரி நீர் வெளியேற்றப்படலாம்  எனவும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனர்.இந்நிலையில் சனிக்கிழமை காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து தற்போது பவானிசாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து முதற்கட்டமாக 3000 கன அடி நீர் அணையிலிருந்து தற்போது உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.1955 -இல் கட்டப்பட்ட பவானிசாகர் அணை இதுவரை 29 முறை நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணை இந்த ஆண்டும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை பவானிசாகர் அணை 100 அடியை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Top