logo
புதுக்கோட்டைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல்  தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

புதுக்கோட்டைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

24/Jul/2021 12:38:29

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியர்கவிதா இராமு முன்னிலையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதிசுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர்  (23.07.2021) தொடங்கி வைத்தனர்.

பின்னர், சட்ட அமைச்சர் ரகுபதி  தெரிவித்ததாவது.  முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் வாய்ப்படுதல் உள்ளிட்ட பிற காரணங்களுக்கு நிமோனியா முக்கிய காரணமாக உள்ளது. மற்ற தடுப்பூசிகளுடன் சேர்த்து 3 தவணை நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த தடுப்பூசியின் முதல் தவணை ஒன்றரை மாதத்திலும், இரண்டாம் தவணை மூன்றரை மாதத்திலும், ஊக்குவிப்பு தவணை ஒன்பது மாதத்திலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். இத்தடுப்பூசி மூச்சுக் குழாய் அலர்ஜி, நிமோனியா மற்றும் நியூமோகோக்கல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான தாக்கங்களுக்கு எதிராக பாதுகாப்பை குழந்தைகளுக்கு வழங்குகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது குழந்தைகளை நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்  எஸ்.ரகுபதி.

 பின்னர்,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது:

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அங்கு நலமுடன் உள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 தமிழக முதலமைச்சர்ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படும் என கடந்த 26-ஆம் தேதி அறிவித்துள்ளார்கள். வழக்கமாக போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகே பரிசுத் தொகை அறிவிக்கப்படும். 

ஆனால் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகையை முன் கூட்டியே அறிவித்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இம்முகாமில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் .பூவதி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி மற்றும் க. நைனாமுகமது, எம்எம்.பாலு உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.


Top