logo
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

30/Jan/2021 08:05:36

சென்னை, ஜன:கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  (29.1.2021), தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்  ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய தொடக்க உரை:கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் முதற்கண் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன், மாண்புமிகு அம்மாவின் அரசால் துரிதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களான N-95 முகக்கவசம், மூன்று மடிப்புக் முகக்கவசங்கள், PPE முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.

 மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, நோய் அறிகுறிகளை அறிந்து, பரவலைத் தடுப்பதற்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டம், மருத்துவ வல்லுநர்கள் கூட்டம் என்னுடைய தலைமையில் 13 முறை நடைபெற்றன. தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் 14 முறை காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

  நான் நேரடியாக பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினேன். ஏறத்தாழ 36 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்ட காரணத்தால் கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் இன்றையதினம் ஒருவர்கூட பாதிக்காத அளவிற்கு அரசு எடுத்த நடவடிக்கை பலன் தந்திருக்கிறது.

 அதேபோல, தொழில்கள் தொடங்க, மாண்புமிகு அம்மாவின் அரசு மிகக் கவனமான தேவையான அளவுகள் தளர்வுகள் செய்யப்பட்டது. கோவிட் நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு இதுவரை ரூபாய் 7,605 கோடி செலவழித்துள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியை கண்டறிதல்

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கபசுரக்குடிநீர் வழங்குதல், இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு, தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு அரசு விழிப்போடு செயல்பட்டு வருகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.


  எந்த ஒரு பகுதியிலாவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத் துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன், அங்குள்ள மருத்துவர்கள் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலமாக அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே பரிசோதித்து, பரிசோதனை மூலம் நோய் அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.


     வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, இரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்று நோய் போன்ற நோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணிப் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நோய்ப் பரவலைத் தடுக்க, அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று மாண்புமிகு அம்மாவின் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 7,05,106 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3,68,72,040 நபர்கள் கலந்துகொண்டு, அதில் 13,57,738 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்தோம். அதனால், கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக அரசின் சார்பாக 68, தனியார் சார்பாக 186 ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. இந்தியாவிலேயே அதிகமான ஆய்வகங்கள் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.

RT-PCR பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை, 1.58 கோடி நபர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளென்றுக்கு ஏறத்தாழ 70 ஆயிரம் நபர்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். RT-PCR பரிசோதனை மூலமாகத்தான் சரியாக, துல்லியமாக நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்த காரணத்தால்தான் இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் மேலும் பரவாமல் தடுத்து, குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகளில் 78 விழுக்காடு அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டது.   பிற மாநிலங்களில் பரிசோதனைகளைக் குறைத்தபோதும் தமிழ்நாடு அரசு அந்தப் பரிசோதனையை குறைக்காமல் நாளொன்று ஏறத்தாழ 70 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம்.

கோவிட் சிறப்பு சிகிச்சை

 மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,38,310 படுக்கைகளும் இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,849 படுக்கைகளும் ICU வசதி கொண்ட 7,706 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏறத்தாழ 15,000 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. டொஸிலிசுமாப் (Tocilizumab) 400 எம்ஜி,  ரெம்டெஸ்விர் (Remdesvir) 100 எம்ஜி,  இனாக்சபெரின் (Enoxaparin) 40 எம்ஜி போன்ற உயரிய மருந்து வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 

மருந்துகள், பரிசோதனை கருவிகள், N95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் (PPE Kits), மும்முடி முகக்கவசங்கள், CT ஸ்கேன், X-ray இயந்திரங்கள் ஆகியவை தேவையான அளவு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் அம்மா அரசு எடுத்ததன் விளைவாக மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் உரிய முறையில் சிகிச்சை பெற்றார்கள்.

தடுப்பு மருந்துகள் விநியோகம்

 களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் (zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகள் விலையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன் - இந்திய முறை மருத்துவ ((Ayush) சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 

பெருநகர சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தல், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அமைத்தல், ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்குதல், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாது இருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குதல் என பல வழிகளிலும் இந்நோய்ப் பரவலைத் தடுக்க அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தேவையான விழிப்புணர்வும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது.

அம்மா மினி கிளினிக் தொடக்கம்

 தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டு இதுவரை 782 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எஞ்சிய கிளினிக்குகள் விரைவாக தொடங்கப்படும். தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்கு பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

கோவிட் தடுப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு. பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங்கள் செயல்பட வேண்டுமென்று பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். இங்கு RT-PCR test சரியான முறையில் எடுத்த காரணத்தினால் தான் இப்போது கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. 

அண்மையில், இந்தியாவிலுள்ள அனைத்து முதலமைச்சர்களுடைய ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில் பாரதப் பிரதமர் அவர்கள் தற்போது தமிழகத்தில்  RT-PCR test முறையாக எடுத்த காரணத்தால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள், இதையே மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று நல்ல ஆலோசனையை வழங்கியிருக்கின்றார்.

தடுப்பூசி முன்னேற்பாடு நடவடிக்கை

 தடுப்பூசி முன்னேற்பாடு நடவடிக்கை, மாவட்ட அளவிலான குழு அமைப்பு, மக்கள் தொகையில் 20 சதவீதமான 1 கோடியே 60 இலட்சம் நபர்களுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இதுவரை 88,467 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமென்ற அறிவிப்பை முதன்முதலாக இந்தியாவிலேயே வழங்கிய அரசு தமிழ்நாடு அரசு.  

விடுதிகள், கல்லூரிகளில், நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் பரிசோதனை மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகள் கண்காணித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நோய்த் தொற்றின் நிலைமை, நோய்த் தொற்றின் சதவீதம் 5.21 ஆகும், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4,629, இறப்பு 1.47 சதவீதம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,19,850, குணமடைந்தவர்களின் சதவீதம் 97.97 ஆகும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்து நிலையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பேரிடர் காலத்தில் அரசு உதவி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் அனைத்து மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசங்கள் வழங்கப்படுமென்ற அறிவிப்பைக் கொடுத்து, அதன் மூலம் 8 கோடியே 41 இலட்சம் முகக்கவசங்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது. 

 2 கோடியே 1 இலட்சம் குடும்ப  அட்டைகளுக்கு சுமார் 8 மாத காலமாக விலையில்லாமல் அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டன. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க நிவாரணமாக 1,000/- ரூபாய் வழங்கப்பட்டது. 

மேலும், 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், 14 நலவாரியத் தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் என 35.65 இலட்சம் தொழிலாளர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

 மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தில் 13.3 இலட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.    கொரோனா காலத்தில் அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலம் நாளொன்றுக்கு மூன்று வேளையும் 8 லட்சம் நபர்களுக்கு உணவளித்த அரசு அம்மாவின் அரசு.

 நிவர் மற்றும் புரெவி புயல் கனமழை காரணமாக சென்னையிலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் வசிக்கின்ற இடங்களுக்கே  சென்று சுடச்சுட சுவையான உணவு 8 நாட்களுக்கு மூன்று வேளையும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று இருந்த காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால், அவர்கள் சிறப்பாக தைப்பொங்கல் கொண்டாட வேண்டுமென்பதற்காக அம்மாவின் அரசு  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அதாவது 2 கோடியே   7 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500/- ரொக்கம் மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பையும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டது.

 ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீட்டில், 5.94 இலட்சம் கட்டுமான ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்திரமும், 6.75 இலட்சம் பெண் தொழிலாளர்களுக்கு புடவையும் தைப்பொங்கலுக்காக வழங்கப்பட்டது, அதோடு பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டது.

பள்ளிகள் திறக்க நடவடிக்கை

   19.1.2021 -ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெற்றோர்களுடைய கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தக் கூட்டத்தில் பெற்றோர்களுடைய எண்ணத்தின்படி மாண்புமிகு அம்மாவின் அரசால் பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் Zinc மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 அதோடு இணைய வழி வகுப்பில் 9.6 இலட்சம் ஏழை, எளிய மாணவச் செல்வங்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, நாளொன்றுக்கு 2 GB data  2021-ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தொழில், வேலைவாய்ப்பு

 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சோதனையான காலக்கட்டத்திலும், அம்மாவின் அரசு திறமையாக தொழில் துறையை கையாண்டதன் விளைவாக ஏறத்தாழ 61,500 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து, 74 புதிய தொழில்கள் தமிழகத்தில் உருவாக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக, ஏறத்தாழ 1.25  லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாநில அளவில் மற்றும் மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவித் திட்டம் விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 11,539.61 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு இதுவரை 3,09,314 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளன.

MS & ME நிறுவனங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் கடன் உதவி திட்டம் (CORUS திட்டம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை பெருக்க, சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அதுமட்டுமல்லாமல், அம்மா அவர்களின் அரசு எடுத்த சரியான நடவடிக்கைகள் காரணமாக இன்றையதினம் 90 விழுக்காடு தொழில்களும் 100 விழுக்காடு வேளாண் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.    மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அரசு அவ்வப்போது அறிவிக்கின்ற ஆலோசனைகளை தங்கள் மாவட்டங்களில் பின்பற்றி நடந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் மிக, மிகக் குறைந்துள்ளது.

இவ்வாறு, மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று உரையாற்றினார்.

Top