logo
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.22  அடியை எட்டியது. அணைக்கு   நீர்வரத்து 11 ஆயிரத்து 456 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.22 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 456 கன அடியாக அதிகரிப்பு

23/Jul/2021 11:35:45


ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.22  அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு   நீர்வரத்து 11 ஆயிரத்து 456 கன அடியாக அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது போல் பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே  நீலகிரி மலைப்பகுதியில்  பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பவானி ஆற்றுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நீர் இன்று பவானிசாகர் அணைக்கு வந்தது. இதையடுத்து பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

105 அடி வரை கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணைக்கு 102 ஆடி  வந்தாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பது விதிமுறை. தற்போது தொடர்ந்து  தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதி பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து  பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Top