logo
நாட்டிலேயே  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரே தவணையாக ரூ.168 கோடி  மானியம்  தமிழகத்தில்தான் வழங்கப்பட்டது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

நாட்டிலேயே சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரே தவணையாக ரூ.168 கோடி மானியம் தமிழகத்தில்தான் வழங்கப்பட்டது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

23/Jul/2021 02:32:15

புதுக்கோட்டை, ஜூலை: நாட்டிலேயே  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரே தவணையாக ரூ.168 கோடி  மானியம்   வழங்கியது தமிழக முதல்வர் ஸ்டாலின்தான்  என்றார் குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத் தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய  அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ திட்டங்கள் புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத் தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

 பின்னர்,  குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள்  ஊரகத் தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் மேலும்  கூறியதாவது: தமிழக முதல்வரின்  அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடப் பணிகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு வீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மாவட்டத்தில் 15 இடங்களில் மொத்தம் 5,270 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீடுகள் சில பகுதிகளில் 80 சதவீதமும், சில பகுதிகளில் 50 சதவீதமும் பணிகள் முடிவுற்றுள்ளது. அனைத்து கட்டுமான பணிகளையும்   9 மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நரிமேட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,920 வீடுகளும், தகுதியுள்ள ஏழை, எளிய பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதே போன்று தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தகுதியுள்ள பயனாளிகளை குடியமர்த்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அரசு பங்களிப்பு தொகை போக மீதமுள்ள தொகை பயனாளி செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பயனாளிகள் தங்களது பங்களிப்புத் தொகையை செலுத்தும் வகையில் வங்கி கடனுதவியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. குடியிருக்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டு மானிமான ரூ.250 கோடியில் 4 தவணையாக வழங்க வேண்டிய மானியத் தொகையை ஒரே தவணையில் ரூ.168 கோடி வழங்கி உத்தரவிட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடந்த மாதமே வழங்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் வரை தொழிலாளர் வரி வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வங்கி மாதத்தவணையை உடனடியாக செலுத்த சொல்லி நிர்பந்திக்க கூடாது எனவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

முன்னதாக  அமைச்சர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.61.42 லட்சம் மதிப்பீட்டில் மானிய கடனுதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினர்.

 குளத்தூர் கீர்த்தி தொழில் நிறுவனம், மேட்டுப்பட்டி காயத்ரி ஆயத்த ஆடை நிறுவனம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கீரனூரில் ரூ.33.67 கோடி மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டு வரும் 368 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்,  போஸ் நகரில் ரூ.35.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 384 வீடுகள் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், மலையப்பா நகரில் ரூ.49.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 576 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் மற்றும் நரிமேட்டில் ரூ150.58 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 1,920 வீடுகள் கொண்ட குடியிருப்புகள் ஆகிய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

மேலும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை புதுக்கோட்டை சிறு, குறு தொழில் அதிபர்கள் நலச்சங்கம், திருச்சி, புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தினை சேர்ந்தவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

 ஆய்வில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர்.வி.அருண்ராய்,  மாவட்ட ஆட்சியர் கவிதா இராமு , தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய மேலாண் இயக்குநர் எம்.கோவிந்தராவ்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன்,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிச்செல்வி போஸ் மற்றும்  க.  நைனாமுகமது உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Top