logo
இன்றைய சிந்தனை...  உன் சாதி...! என் சாதி...!!

இன்றைய சிந்தனை... உன் சாதி...! என் சாதி...!!

03/Oct/2020 06:24:16

உலகத்தில் யாருக்கும் இல்லாத சில பெருமைகள் நமக்கு உண்டு. சாதியின் பெயரால் சங்கம் அமைப்பது அவற்றில் ஒன்று...

 சாதி, சாதி என்று வாழ்நாள் முழுவதும் தன் சாதியின் பெருமையைப் பேரிகை கொட்டியே கழிக்கும் பலரைக் கண்டிருக்கின்றோம்...சாலையில் ஒரு விபத்தில் சிக்கி ஒருவன் கீழே விழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அனைவரும் தாமாக ஓடி வந்து அவனுக்கு உதவுவார்களே தவிர, விழுந்தவன் எந்த சாதி என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த சாதிக்காரர்கள் மட்டும் முன் வந்து உதவுவதில்லை...

 தொலைக்காட்சியில் செய்தி முடிந்ததும், அறுவை சிகிச்சை பெறப்போகும் நபருக்காக குருதி தேவை என்பார் அறிவிப்பாளர்... "A", "B" பிரிவு அல்லது "O" வகை குருதி தேவை என்று கேட்பாரே தவிர என்றாவது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை, அவர் சாதியைச் சார்ந்தவர் மட்டுமே குருதி கொடுக்கலாம் என்றும் கேட்பதில்லை...

 முனுசாமி முதலியாருக்கு தேவை மூணு குப்பிகள் முதலியார் குருதி. நாகசாமி நாயுடுவிற்குத் தேவை நான்கு குப்பிகள் நாயுடு குருதி, காளிமுத்து கவுண்டருக்கு தேவை ஐந்து குப்பிகள் கவுண்டர் குருதி, ஐயாசாமி ஐயருக்குத் தேவை ஐந்து குப்பிகள் ஐயர் குருதி என்று ஒருபோதும் கேட்பதில்லை.

 உண்மையில் கூறவேண்டுனால் எனக்கு வெள்ளைக்காரர் குருதிதான் தேவை, கறுப்பர் இரத்தம் கூடாது என்று கூறவது அறிவீனம்...உதாரணத்திற்கு ஒரு வெள்ளைக்காரரின் குருதியில் எய்ட்ஸ் எனும் ஆட்கொள்ளி  இருந்தால் அந்த குருதியைப் பெறக்கூடாது என்பதில் பொருள் இருக்கிறது.ஆனால்!, எய்ட்ஸ் இல்லாத கறுப்பர் குருதியைப் பெறலாம். உடலின் நிறம் வேறுபடலாமே தவிர, குருதியின் நிறம் வேறுபடுவதில்லை. குருதியில் இல்லாத மாற்றங்களை நாம் உண்டாக்கி விட்டோம்.

 ஆம் நண்பர்களே.. வளர்க்க வேண்டிய மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றோம், அழிக்க வேண்டிய சாதிகளை வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம். மனிதர்களை சாதியின் பெயரால் கூறு கூறாகப் பிரித்துவிட்டோம். உடைத்து விட்டோம். இதுவரை சாதி, சாதி என்று நாம் சொல்லி சராசரிக்கும் கீழே இறங்கிப் போய்விட்டோம். இன்றைய நாளில் சாதியில் அரசியலும் அரசியலில் சாதியும் கலந்திருப்பதை காணலாம். இது மக்களாட்சி அமைப்பிற்கு மிகவும் எதிரானது. அது ஒரு தடைக்கல். அதனை அகற்றாமல் நாம் ஓரடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது.

 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித குறிக்கோள்களுக்கு எதிரானதுதான் இந்த சாதியமைப்பு, சாதி ஒழிப்பு என்பது சாதி அரசியலை ஒழிப்பதில் இருந்தே தொடங்க வேண்டும்.!!! வலுவான பல சக்திகளாலும் சிந்தனையாளர்களாலும் கூட முடியாத செயல் அல்லவா இதுவென்று வியக்க வேண்டாம். தனி நபர்களைக் காட்டிலும் சமூகம் பலமானது. தவிரவும், சாதி என்பது ஒரு சமூக தீநுண்மி..!!.  அதைச் சமூகம்தான் ஒன்று திரண்டு களைந்தாக வேண்டும். வாருங்கள்!, நாம் இணைந்து சாதிகள் இல்லாத புதிய உலகம் படைப்போம். மனிதர்களை மதிப்போம்.                                                                                

 - யாரோ      

Top