logo
ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்

ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்

21/Jul/2021 11:07:38

ஈரோடு,  ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 250-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் 32 ஈத்கா மைதானங்கள் உள்ளன.  ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பண்டிகை அன்று  ஈத்கா மைதானங்களில்  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்துவார்கள்.  

ஆனால், தற்போது கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை  கடைப்பிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபடலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பக்ரீத் பண்டிகையொட்டி அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 


ஈரோடு வ.உ. சி. பூங்கா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக  வ.உ.சி.பூங்கா  ஈத்கா மைதானத்தில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சமூக இடைவெளி கடைப்பிடித்து அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோபி பகுதிக்குட்பட்ட கடத்தூர், நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  பக்ரீத் பண்டிகையை யொட்டி   18  பள்ளிவாசல்களில்  காலை 8 மணிக்கு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதைப்போல் சத்தியமங்கலத்தில்  பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், வண்டிப்பேட்டை, பாத்திமா நகர், நேரு நகர் உள்ளிட்ட 8  பள்ளிவாசல்களிலும் இந்த சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் அந்தியூர், பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, சித்தோடு, கவுந்தப்பாடி, புஞ்சை புளியம்பட்டி உள்பட  பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  குர்பானி வழங்கப்பட்டது.


Top