logo
ஈரோட்டில் பிரம்மாண்டமாக    காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோட்டில் பிரம்மாண்டமாக காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல்

21/Jul/2021 06:32:58

ஈரோடு,  ஜூலை: ஈரோட்டில் பிரம்மாண்டமாக    காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு. முத்துசாமி .

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் முன்னிலையில்   நடந்த  நிகழ்வில் அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் பணிக்காக 9489092000  என்ற வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்து வைத்தார்.

  பின்னர், அமைச்சர் முத்துசாமி  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பொதுமக்கள் தங்கள் புகார் குறித்து  தெரிவிக்கவும் புகார் மனுக்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் புதிதாக வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை வாட்ஸ் அப்  மூலம் தெரிவிக்கலாம். 

இந்த புகார் அந்தந்த அதிகாரிகளின்   கவனத்திற்கு  உடனடியாக செல்லும். பிரச்னைக்கு எவ்வளவு காலத்திற்குள் தீர்வு காண முடியும் என்று உறுதியாக கூற முடியாது. காரணம் ஒரு சில புகார்களுக்கு இரண்டு நாட்களில் தீர்வு காண முடியும். இன்னும் சில வாரங்களுக்கு மாதக் கணக்காகும். பிரச்சனை தன்மை பொறுத்து அது முடிகின்ற காலத்தை சொல்ல முடியும். 

பழைய கட்டிடத்தை  பொருத்தவரை நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். இனிமேல் எந்த ஒரு கட்டிடம்  விதிமுறைகளை மீறி கட்ட முடியாது என்பதை உறுதியாகக்கூறமுடியும். ஒரு கட்டிடம் விதிமுறைக்கு உட்பட்டு தான் கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் கண்காணிக்கும்.  விதிமுறைகளும் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

சாயக்கழிவு நீர் நிலத்தடி நீர் மாசு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிகள் செய்து வருகிறோம். சோலார் பகுதியில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆய்வுப் பணியும் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளும் பேசி வருகின்றனர். இதைப்போல் ஈரோட்டில் தமிழ்நாட்டிலேயே  இதுவரை இல்லாத அளவாக மிக பிரம்மாண்டமாக ஒரு காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


 சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டை விட பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் மார்க்கெட்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளுக்கான ஆய்வு நடந்து வருகிறது. டெக்ஸ்டைல்ஸ் யுனிவர்சிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் நீர்வழி புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் முத்துசாமி.

இதைத் தொடர்ந்து, நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ. 30.85 கோடி மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.  இதில் மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்துமிடம்,  காய்கறி அங்காடிகள், பழ அங்காடிகள்   மற்றும் பழவகைகள் பதப்படுத்துவதற்கான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகின்றன.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி வைரா பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் மாநகராட்சி குப்பை பயோ மைனிங்  முறையில் 3.41  எக்கர் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத் திணை மியாவாக்கி முறையில் அடர்வனப்பகுதியாக மாற்றும் பணியையும் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Top