logo
தமிழகத்தில் மணல்குவாரிகளை திறக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் மணல்குவாரிகளை திறக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

19/Jul/2021 11:47:01

ஈரோடு, ஜூலை: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கே.ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல், தட்டுப்பாடின்றி யூனிட் ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.3,500க்கு கிடைத்தது. இத்தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இத்தொழில் இருந்தது. 

கடந்த 2017 ஜூன்  மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் 60,000 யூனிட் மணல் தேவைப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 4 ஆண்டுகளில் 6  குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதன்மூலம் தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டது.

  மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுத்து யூனிட் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்கின்றனர். கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மணல் ரூ.8,000த்துக்கு  வாங்கி தமிழகத்தில் ரூ.20,000 வரை விற்பனை செய்கின்றனர். 

மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரிகள், லோடு இல்லாததால், நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளனர்.

மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக  இயக்க வேண்டும். திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Top