logo
 பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தமிழகத்தில் பின்பற்றப்படும்:  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தமிழகத்தில் பின்பற்றப்படும்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

18/Jul/2021 11:52:32

புதுக்கோட்டை, ஜூலை:பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டுகளில் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடைமுறை தான் இந்த ஆண்டும் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான  பூமி பூஜை நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்ச கூறியதாவது: நமது பாரம்பரிய கலையான சிலம்பாட்டக்கலையை தமிழக பாடப்புத்தகத்தில் முதல்வர் இடம்பெறச் செய்துள்ளார். 3 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

சிலம்பப் போட்டியில் தேசிய அளவில் சேர்ப்பதற்காக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டுகளில் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த முறை தான் இந்த ஆண்டும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும். பட்டாசுகளே  தேவையில்லை என்பதுதான் சுற்றுச்சூழல் துறையின் கருத்தாக உள்ளதுஅதற்கு பதிலாக ஒவ்வொருவரும் 5 மரக்கன்றுகளை நடவேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு செய்யப்பட்டு 5 பேர் ஏற்கனவே டோக்கியோவுக்கு சென்றுவிட்டனர். நாளை ஒரு வீரர் செல்ல உள்ளார் மீதமுள்ளவர்கள் விரைவில் டோக்கியோ செல்ல உள்ளனர். அனைத்து வீரர்களின் பாதுகாப்பும் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.ஏற்கெனவே வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டது அனைத்து வீரர்களும் பாதுகாப்போடு உள்ளனர்.

தமிழக வீரர்களின் பாதுகாப்பை  கண்காணிக்கும் பணியில் தமிழக முதல்வர் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.தினந்தோறும் வீரர்களிடம் முதல்வர் வாட்ஸ்அப் மூலம்  கலந்துரையாடி வருகிறார்.

 ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கு செயல்பட்டு வருகிறது தொழிற்சாலையிலிருந்து செல்லும் கழிவுநீர், அங்கு மறுசுழற்சி மூலமாக சாயக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் அந்த தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் காற்று மாசுபாடு நீர் மாசுபாடு ஆகியவை ஏற்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பு பணியில் சுற்றுச்சூழல் துறை ஈடுபட்டுள்ளது.

புதிய யுத்திகளை கண்டறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தை மாசுபடாத மாநிலமாக  மாற்றுவதுதான் முதல்வரின் லட்சியம். ஐந்தாண்டு காலத்தில் தமிழக முதல்வர் சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆறுகள் ஏரிகள் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பார். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதற்கான மாற்று திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும்   என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். 

உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு , முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.


Top