logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

08/Jun/2021 10:06:21

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  செவ்வாய்க்கிழமை(8.6.2021) துவக்கி வைத்து, அரிமளம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர்  எஸ். ரகுபதி  கூறியதாவதுபுதுக்கோட்டை மாவட்டத்தில்நெல் விளைச்சல்  அதிகமுள்ள  பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் தொடர்ச்சியாக திறக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கறம்பக்குடி வட்டம், மழையூர், வெள்ளாளவிடுதி மற்றும் பல்லவராயன்பத்தை ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்படுகிறது.மேலும் மாவட்டத்தில் தற்பொழுது 44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மேலும் அரிமளம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆர்டிஓ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொண்டு நிறுவனத்தினர் ஏற்கெனவே பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்கள்.

தற்பொழுது இவர்கள் வழங்கிய 1,500 எண்ணிக்கையிலான N-95 முகக்கசங்கள்  மற்றும் 8,000 எண்ணிக்கையிலான கையுறைகள் கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இதற்காக ஆர்டிஓ தொண்டு நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இது போன்று மருத்துவமனைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது  என்றார்  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து திருமயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடக இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, ஒன்றியக்குழு தலைவர்கள் மாலா ராஜேந்திரதுரை, மேகலா முத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக உதவி மேலாளர் ராமகுரு, ஆர்டிஓ தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் குழந்தைவேலு உள்ளிட்டடோர்  கலந்து கொண்டனர்.

Top