logo
குளித்தலையிலிருந்து  காவிரி நீரை  குழாய் மூலமாக  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திருப்பி விடக்  கோரிக்கை

குளித்தலையிலிருந்து காவிரி நீரை குழாய் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திருப்பி விடக் கோரிக்கை

18/Jul/2021 03:24:30

புதுக்கோட்டை, குளித்தலையிலிருந்து  காவிரி நீரை  குழாய் மூலமாக  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  திருப்பி விட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூட்டமைப்பு  தலைவர் மேலப்பனையூர் இராம. தீர்த்தார் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மூலமாக  தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிய மனு விவரம்: 

முத்தமிழ் அறிஞர் கலைஞரின்  உயரிய  சிந்தனையில்  1996-ஆம் ஆண்டு  உருவான கொள்ளிடம் உபரி நீர்த்திட்டம் காவிரி வைகை குண்டாறு இணைப்பு: திட்டமாக ஏழு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் பரிணமித்து, அதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், மாயனூரில் மிகப்பெரிய தடுப்பணை கட்டப்பட்டது. பிறகு 10 ஆண்டுகால ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு தேர்தல் லாபத்திற்காக 2021-ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தினை விரைந்து முடித்து ஏழு மாவட்ட விவசாயிகளின் நீராதாரத்தை  தாமதமின்றி உருவாக்த வேண்டும்..

காவிரி- குண்டாறு- வைகை- திட்ட வடிவமைப்பில் விராலிமலை பெரும்பகுதி, இலுப்பூர், அன்னவாசல், பொன்னமராவதி திருமயம் தாலுகா விவசாய நிலங்கள், ஏரிகள், கண்மாய்கள் தொடர் கால்வாய்கள் இருந்தும் பயன்பெற இயலாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகள் மேடாக உள்ளதென நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

ஆனால், அதற்கு மாற்றுத்திட்டமாக  மேற்கண்ட பகுதியில் பயன்பெறும் வகையில் குளித்தலை பகுதியிலிருந்து குழாய் மூலம் (பம்பிங் சிஸ்டம் நீரேற்று முறையில் திருச்சி வேலமலையில்  சேமித்து  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து வரும் வகையில் தெற்கு வெள்ளாற்றில் இணைத்துவிட்டால், மேலே கூறிய தாலுகாவில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயமும்  செழித்தோங்க முடியும்.  பம்பிங் முறையில் நீரேற்றும் பொழுது மின்சார உற்பத்தியும் செய்ய முடியும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இந்த மாற்று யோசனை தொடர்பாக, முன்னாள் முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகி குறைந்த தூரமே பாய்ந்து தமிழ்நாட்டில் நான்கில் மூன்று மடங்கு அதிக தூரம் பயணித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகிய காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை என்ன விலை கொடுத்தும் நமது உரிமையை  மீட்டெடுக்கும்  அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக விவசாயிகளின்ஆதரவு என்றென்று இருக்கும்.

அனைத்து மக்களின் அரசாக திகழவேண்டிய ஒன்றிய அரசும்  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டத்தை கொரோனா காலத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றியது போல துரோகம் விளைவிக்கும் நிலையை வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதிமன்றத்தில் உரிய முறையில் வாதாடி  நமது உரிமைகளைப்  பெறவேண்டும். மேற்படி கர்நாடகாவில் கட்டிமுடிக்கப்பட்ட தடுப்பணையும், கட்ட  முயற்சிக்கின்ற மேக்கேதாட்டு  அணைகளுக்கு ஒன்றிய மாநில அரசுகளின் சுற்றுசூழல் வனப்பாதுகாப்பு போன்றவைகளிலும் அரசுக்கு எதிராக கொடுத்த அறிக்கைகளை வலுவான ஆதாரங்களை  வாதத்தில் முன் வைத்து வெற்றி பெற்றிட வேண்டுகிறோம்.

சட்டரீதியான  போராட்ட விஷயங்கள் தங்களுக்கோ அமைச்சர்களுக்கோ நிர்வாக துறைக்கோ தெரியாதவை அல்ல. இதை ஆலோசனையாக இல்லாமல் நினைவூட்டுதலாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டுகிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

 

Top