16/Jul/2021 04:10:42
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓட்டக்குளம் கண்மாயை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுகை நகரின் நடுவில் அமைந்திருந்த பழைய அரண்மனையை மையமாக வைத்து நான்கு திசைகளிலும் தலா 4 அடுக்கு முறையில் மொத்தம் 16 வீதிகள் அமைக்கப்பட்டன. மேலும், நான்கு திசைகளிலும் பிரதான வீதியை ராஜவீதி எனவும், அடுத்தடுத்த வீதிகளை 2, 3, 4 என்ற வரிசையில் நேரான அகலமான வீதிகள் அமைக்கப்பட்டன.
மேலும், மேட்டுப்பகுதியான நகரின் வடக்கில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள 6 மழை நீர்க்கால்வாய்கள் மூலம் மச்சுவாடியில் தொடங்கி காட்டுப்புதுக்குளம் (புதிய பேருந்து நிலையம்) வரை ஏறத்தாழ 36 குளங்களும் ஒன்றின் வடிகால் நீர் மற்றொரு குளத்துக்குச் சென்று வரிசையாக நிரம்பும் வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
இந்த வீதிகளிலுள்ள குடியிருப்புகளின் முன்பகுதியில் மழைநீர் கால்வாய்களும், பின் பகுதியிலும் கழிவு நீர் செல்லும் கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இதன் கிடைக்கும் மழைநீரானது சாலைகளிலோ தெருக்களிலோ பெருக்கெடுத்து ஓடாமல் தூய்மையாக குளங்களில் போய்ச்சேரும். இதைக் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் மக்ககள் பயன்படுத்தி வந்தனர். கழிவு நீரானது தனிக்கால்வாய் வழியே குண்டாற்றில் கலக்கிறது.
புதுக்கோட்டை நகரில் பெய்யும் பருவ மழையால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் நோக்கில் புதுகை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நகருக்குள் உள்ள குளங்களுக்கு மழைநீர் வரக்கூடிய முக்கிய வரத்துவாரிகள் தூர்வாரப்பட்டதன் பலனாக ,பல்லவன்குளம், நைனாரிக்குளம், ராஜாகுளம், அய்யர் குளம், காந்தி பூங்காக்குளம் உள்பட 10 -க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் நிரம்பிய வெளியேறும் உபரி நீரானது புதிய பேருந்து நிலையம் அருகில் பெரிய வாய்க்கால் வழியாக காட்டுப்புதுக்குளத்தில் சேர்கிறது. இங்கிருந்து மேற்குப் பகுதியில் புறவழிச்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தைக் கடந்து சந்திரமதி கால்வாய் வழியாக நகரை விட்டு வெளியேறி வெள்ளாற்றில் கலக்கிறது
இந்நிலையில்,கவிநாடு கண்மாயில் அமைக்கப்பட்டுள்ளன சுமார் 7 ஷட்டர்கள் மூலம் பாசன பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், ஒன்றான சந்திரமதி கால்வாயிலிருந்து வெளியேறும் தண்ணீரானது கவிநாடு மேற்கு ஊராட்சி அகரப்பட்டி வழியாக, ராஜகோபாலபுரம், பூங்காநகர், கூடல்நகர் வழியாக திருமயம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு ஷட்டர் மூலம் ஓட்டக்குளத்தில் நிரம்பிய பிறகு அங்கிருந்து வெளியேறி வெள்ளாற்றில் கலக்கும் வகையில் சுமார் 5 கிமீ தொலைவுக்குச் செல்கிறது இக்கால்வாய்.
சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் ஓட்டக்குளம் கண்மாய் தூர்வாரப்படாதால், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிநீர் நிரம்பும் குட்டையாக மாறி வருகிறது. இதைத்தடுத்து குளத்தை தூர்வாரி பாசன வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கச்செய்ய வேண்டுமென இந்தக்குளத்தின் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, ஓட்டக்குளம் ஆயக்கட்டுத் தலைவர் செ.விஜயகுமார் மற்றும் பொன்னம் பட்டி ஊரார்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை தெற்கு பொன்னம்பட்டி கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 1000 ஏக்கர் விவசாயம் நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக பொன்னம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓட்டக்குளம் கண்மாய் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல்உள்ளது.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓட்டக்குளத்தினை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிடவும் உபரி நீரினை வீணாக்காமல் 1000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்திட ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடவேண்டுமென அதில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான இந்தக் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நூற்றுக்கணக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.