logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  செப்டம்பர்  மாதம் வரை  கொப்பரை தோங்காய் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் வரை கொப்பரை தோங்காய் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்

14/Jul/2021 10:29:05

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  செப்டம்பர்  மாதம் வரை  கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதால் தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், இராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யும் பணியை   சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும்  பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் அரவை கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரசால்  2021 -ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான அரவை கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.103.35 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இந்த கொப்பரை கொள்முதல் செப்டம்பர் 2021 வரை நடைமுறையில் இருக்கும். 

இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி, தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார்அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

மேலும்,புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 2019 -20 ஆம் ஆண்டில் 18.750 மெ.டன் கொப்பரை ரூ.95.21 -க்கு கொள்முதல் செய்யப்பட்டு 44 விவசாயிகளுக்கு ரூ.17,85,187 தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

2020 -21 ஆம் ஆண்டில் 6.150 மெ.டன் கொப்பரை ரூ.99.60 -க்கு கொள்முதல் செய்யப்பட்டு 10 விவசாயிகளுக்கு ரூ.6,12,540 தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.103.35க்கு அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.  இதில் அறந்தாங்கி விற்பனை கூடத்திற்கு 550 மெ.டன்னும், ஆலங்குடி விற்பனை கூடத்திற்கு 550 மெ.டன்னும் 2021 ஆம் ஆண்டிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்பொழுது தென்னை விவசாயிகளால்   80 சதவீதம் தென்னை மரங்கள் மீண்டும் நடப்பட்டு தோப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் அயராத உழைப்பு பாராட்டக்குரியது. ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட தேவையான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 முதலமைச்சர் அமைத்த பசுமைக் குழு மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் வணிக துணை இயக்குநர் சங்கரலெட்சுமி, விற்பனைக்குழு மேலாளர் மல்லிகா மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top