logo
தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று கோவிட் பரிசோதனை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று கோவிட் பரிசோதனை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

09/Jun/2021 09:50:56

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று கோவிட் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

 புதுக்கோட்டை மாவட்டம், பூவைமாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அமைச்சர்  கூறியதாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில்  புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்பூவைமாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்   ஆய்வு செய்யப்பட்டது.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்த மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதுடன் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொது மக்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கோவிட் பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்ளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ  சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன் கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் கடைக்கோடி பொதுமக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்யும் வகையில் கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டும்,.

உள்ளாட்சி அமைப்பினருக்கு ஏற்கனவே பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வழங்கப்பட்டு வார்டு வாரியாக பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களில் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பநிலையிலேயே கண்டறிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதில் கோவிட் அறிகுறியுடன் ஆரம்பநிலையிலேயே கண்டறியும் நோயாளிகளுக்கு அந்தந்த பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையங்களில் தரமான உணவுடன் கூடிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதிக பாதிப்பு உள்ள கோவிட் நோயாளிகளை மட்டுமே அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதனால் அரசு மருத்துவமனைகளில் அதிகபடியான கோவிட் நோயாளிகள் வருகை தவிர்க்கப்பட்டு மருத்துவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன் நோயாளிகள் தங்களது பகுதிகளிலேயே கோவிட் கவனிப்பு மையங்கள் மூலம் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பகுதிகளிலேயே  உயர்தர மருத்துவ சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

முன்னதாக  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சி, கல்யாணபுரம் பைங்கிகுளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருத்தி மரம் அறக்கட்டளை சங்கமம் சார்பில் மரக்கன்றுகளை நட்டார்.


மேலும் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். பின்னர் ஆலங்குடியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர், வாடகை டாக்ஸி ஓட்டுநர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளையும்  அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) இராமு, பொது சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில சட்ட ஆலோசகர் ராஜாங்கம், வெள்ளாளவிடுதி ஊராட்சிமன்றத் தலைவர் பரமசிவம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Top