logo
கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை துண்டறிக்கையை விநியோகித்த கல்வித்துறையினர்

கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை துண்டறிக்கையை விநியோகித்த கல்வித்துறையினர்

12/Jul/2021 03:44:49

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித்தொலைக் காட்சியின் கால அட்டவணை குறித்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி  அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமையாசியர்களும், ஆசிரியர்களும் , மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி பார்த்து பாடங்கள் கற்பதை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், இலுப்பூர் கல்வி  மாவட்டத்திலும்  மாவட்டக்கல்வி அலுவலர்  ப.சண்முகநாதன் தலைமையில் அதிகாரிகள் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, மருதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளை பார்வையிட்டு

ஆசிரியர்கள் வருகை, புதிய மாணவர்கள் சேர்க்கை, புதியதாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதா கல்வித்தொலைக்காட்சி பயன்பாடு, பள்ளி வளாகத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு  அம்சங்களை ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியினை சேர்ந்த மாணவர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சிக்கான கால அட்டவணை தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கி  அட்டவணைப்படி  கல்வி தொலைக்காட்சியை பார்க்க அறிவுறுத்தினர். 

மேலும், மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த நூறு நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வித்தொலைக்காட்சிக்கான கால அட்டவணை துண்டறிக்கைகளை வழங்கி கால அட்டவணைப்படி அவர்களது குழந்தைகளை  கல்விபயில  உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Top