logo
ஈரோட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு  நாளை முதல் உழவர் சந்தைகள் திறக்கப்படுகின்றன: பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஈரோட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் உழவர் சந்தைகள் திறக்கப்படுகின்றன: பாதுகாப்பு பணிகள் தீவிரம்

11/Jul/2021 05:53:55

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டத்தில்2 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை  உழவர் சந்தைகள் திறக்கப்படுவதால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் என 5 இடங்களில் உழவர் சந்தை இயங்கி வந்தது. உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் நேரடியாக வந்து இருப்பதால் மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறி விலை குறைவாகவே இருக்கும். இதனால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

 இந்நிலையில்,கொரோனா  தாக்கம் காரணமாக  உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில் தாக்கம் குறையத் தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 5-ஆம்  தேதி முதல் பிற காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஆனால் ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5  உழவர் சந்தையும் 12.7.2021  முதல் திறக்கப்படுகிறது.

 இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் வணிகப்பிரிவு துணை இயக்குனர் சண்முகசுந்தரம் கூறியதாவது: ஊரடங்கால் மூடப்பட்டிருந்த உழவர் சந்தைகள், அரசின் தளர்வால் வரும்  திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. 

அங்கு காய்கறி விற்பனையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளும், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அதிக கூட்டம் சேர்க்காமல் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். காய்கறி, பழங்கள் வாங்க வரும் நுகர்வோரும் முககவசம் அணிந்து, அரசின் விதிமுறையை பின்பற்றி வந்து செல்ல வேண்டும் என்றார் அவர்.முன்னதாக   உழவர் சந்தைகளில்  கிருமிநாசினி தெளிக்கும் பணி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

Top