logo
ஈரோடு அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்காக  திறப்பு

ஈரோடு அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

10/Nov/2020 07:02:33

ஈரோடு: ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கல்வெட்டுகள், கல் சிலைகள், பழங்கால நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை பொருட்கள்  பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 

இங்கு மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் போன்றவர்கள் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்து செல்கின்றனர். சிறுவர்களுக்கு ரூ.3 , பெரியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ. 100 -ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. 

பழங்கால பொருட்கள்  பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அழகாக வரிசைப்படுத்தி வைத்து உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அருங்காட்சியம் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு அரசு அருங்காட்சியம் இன்று(10.11.2020) மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. 

ஏறத்தாழ 7 மாதங்களுக்குப் பிறகு அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டது. முதல் நாள் என்பதால் குறைந்த அளவே பார்வையாளர்கள் வந்திருந்தனர். நுழைவாயில் அவர்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டன.  கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு அருங்காட்சியம் சார்பாக இலவச முகக் கவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் பெருமல் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட்டது.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது.

இதுபற்றி, ஈரோடு அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: 

ஈரோடு அருங்காட்சியகம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திறக்கப்பட்டாலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுடன் திறக்கப்படுகிறது. அருங்காட்சியம் வரும் பொதுமக்கள் கைகள் கழுவ சோப்பு தண்ணீர் மற்றும் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.

அரிய பொருட்களை பார்வையிடும் இடத்திலும் சமூக இடைவெளி பின்பற்ற தரையில் அடையாளங்கள் போடப்பட்டு உள்ளன. நுழைவுக்கட்டணம் கியூ.ஆர். கோடு மற்றும் வங்கி அட்டைகள் மூலமும் பெற புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.                                                                               

        


Top