logo
வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தில் வட்டி மானியத்தில் ரூ.2 கோடி வரை   விவசாயிகளுக்கு கடனுதவி: மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்.

வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தில் வட்டி மானியத்தில் ரூ.2 கோடி வரை விவசாயிகளுக்கு கடனுதவி: மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்.

03/Oct/2020 09:49:01

புதுக்கோட்டை:வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயிகளுக்கு  வருடத்திற்கு 3 சதவீதம் வட்டி மானியத்துடன் அதிகபட்சம் ரூ.2 கோடி வங்கிக் கடன் 7 வருடங்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

 வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் கூறியதாவது:

தமிழக அரசு வேளாண்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்இன்றைய தினம் நடைபெற்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ் அறுவடைக்குப் பிந்திய மேலாண்மைக்கான உட்கட்டமைப்பு மற்றும் சமூக விவசாய சொத்துக்கள் போன்ற சாத்தியமான திட்டங்களுக்கு நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் நிதி ஆதாரங்களின் மூலம் வழங்குதல் ஆகும்.

மேலும், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உட்கட்டமைப்பிற்கான திட்டங்களான கிடங்குகள், சைலோஸ், பேக் ஹவுஸ், மதிப்பிடும் அலகுகள், வரிசைப்படுத்துதல் மற்றும் தரம் பிரிக்கும் அலகுகள், குளிர் சங்கிலிகள், சிற்றுந்து போன்ற தளவாட வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், முதன்மைச் செயலாக்க மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் மற்றும் அங்கக உள்ளீடுகள் உற்பத்தி, உயிர் தூண்டுதல் உற்பத்தி அலகுகள், வேளாண் பயிர்க் குழுக்கள், ஏற்றுமதி குழுக்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கீழ் மத்திய, மாநில உள்ளூர் அரசுகள் அல்லது அவற்றின் முகவர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்கள் ஆகியவை தகுதி பெற்றவைகளாகும்

இத்திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், சந்தைப்படுத்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களுக்கும், உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும், விவசாயிகளுக்கும், கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கும், வேளாண் தொழில் முனைவோர்களுக்கும், ஸ்டார்ட் அப்-களுக்கும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் ஆதரவளிக்கப்படும் பொது மற்றும் தனியார் துறை திட்டங்கள் ஆகியவற்றிற்கு உதவி நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.

மேலும் இத்திட்டமானது விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிந்திய இழப்புகள், விவசாயிகளுக்கான சந்தைத் தொடர்பினை அதிகப்படுத்துதல், நவீன கட்டும் மற்றும் குளிர்சாதன வசதிகளை அதிகப்படுத்துதல் போன்ற வகைகளில் விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் அறுவடைக்கு பிந்திய இழப்புகள் குறைவதுடன், வேளாண்மை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வருடத்திற்கு 3 சதவீதம் வட்டி மானியத்துடன் அதிகபட்சம் கூ.2 கோடி வங்கிக் கடன் 7 வருடங்கள் வரை அளிக்கப்படுகிறது. மேலும் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்துறை மற்றும்  வேளாண் பொறியியல்துறை புதுக்கோட்டை என்ற முகவரியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு துறை அலுவலங்களை தொடர்பு கொள்ளலாம்.இக்கூட்டத்தில்  நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.. 


Top