logo

தமிழகத்தில் வேறு கோவிட் அலை வந்தாலும் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார்:அமைச்சர் எஸ். ரகுபதி

11/Jul/2021 01:19:41

புதுக்கோட்டை, ஜூலை: தமிழகத்தில்  வேறு கோவிட் அலை வந்தாலும்  தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்று  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (10.07.2021)  நடைபெற்ற  கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு விபா தன்னார்வ அமைப்பின் உதவியுடன், ஆர்டிஓ தொண்டு நிறுவனத்தின் சார்பில் உணவு பொருட்களை  வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று  பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற ஆர்டிஓ தொண்டு நிறுவனம் திருவரங்குளம், திருமயம், அரிமளம், ரெங்கம்மாள்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த ஆண்டில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் திருவரங்குளம் மற்றும் திருமயம் சட்டமன்ற பகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்கள்.  

மேலும் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் மூலம் லேணாவிளக்கு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள், ரெங்கம்மாள்சத்திரம் குறவர் காலனியில் வழங்கிய கோவிட் நிவாரண உதவிகள் என கோவிட் தொற்று காலத்தில் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த 35 குழந்தைகளுக்கு ஆர்டிஓ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 12 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் முதல் மாதத்திற்கு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மீதமுள்ள 11 மாதங்களுக்கு மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் வீடு தேடி கொண்டு சென்று வழங்கப்படும்.

தமிழக அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதுபோல் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் மூலம் மனிதாபிமான அடிப்படையில் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இதுபோல் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பராமரித்து, சிறந்தவர்களாக உருவாக்கும் மகத்தானப் பணியினை  மேற்கொண்டு வரும் உறவினர்களின் தியாக உணர்வுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று பெருமளவு குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கோவிட் வேறு அலை வந்தாலும் அதனையும் தடுக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்று சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.

 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி, ஆர்டிஓ தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் குழந்தைவேலு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top