logo
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

10/Nov/2020 12:28:31

ஈரோடு:புதுமை காலனி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திமுக பெரிய நகர் பகுதி செயலாளர் அக்னி சந்திரன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், நடராஜன் ஆகியோர் தலைமையில்  ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்..

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட புதுமை காலனியில் பெரியார் நகர் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பில் 1072 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வந்தனர்.

இந்த வீடுகள் பழுதடைந்ததை ஒட்டி ஆறு வருடத்திற்கு முன்பு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


மேலும், அந்தப் பழைய அடுக்குமாடியில் குடியிருந்தவர்கள் தற்காலிகமாக வீடு பார்த்து செல்வதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு தல ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டு அவர்கள் மாற்று இடத்திற்கு  சென்றனர். இதற்கிடையே தற்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விண்ணப்பித்தோர் முன்பணமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம்  கொடுக்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழைய பயனாளிகள் தற்போது கொரோனா  காலத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் இவ்வளவு மிகப்பெரிய தொகையை கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது அதனால் எங்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை கொடுக்கும் உத்தரவை ரத்து  செய்து வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். 

                                                                               

        


Top