logo
 கர்நாடகாவுக்குள்  அனுமதி இல்லாததால், சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலமலை வனப்பகுதி வழியாக தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கம்

கர்நாடகாவுக்குள் அனுமதி இல்லாததால், சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலமலை வனப்பகுதி வழியாக தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கம்

06/Jul/2021 09:55:27

ஈரோடு, ஜூலை: கர்நாடகாவுக்குள்  அனுமதி இல்லாததால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தலமலை வனப்பகுதி வழியாக தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடிக்கு நேர்வழியாக திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல கர்நாடக பகுதிகளை தாண்டிச் செல்ல வேண்டும். கர்நாடக மாநிலத்தில் நுழைய அனுமதி இல்லாததால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலமலை வனப்பகுதி வழியாக தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் பேருந்துகள் வழக்கமாக ஆசனூர், புளிஞ்சூர், கும்பாரகுண்டி வழியாக செல்வது வழக்கம்.  இந்த வழியில் தமிழக எல்லைப் பகுதிகளுக்கு நடுவே சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் கர்நாடக பகுதி அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியான புலிஞ்சூர், கோழிப்பாளையம் ஆகிய கிராமங்களைத் தாண்டி மீண்டும் தமிழக  எல்லைக்குள் உள்ள கும்பரகுண்டி வழியாக தாளவாடி சென்றடையும்.  வழக்கமான பாதையில் செல்லும் போது திம்பத்திலிருந்து 30 கிலோமீட்டர் பயணித்து தாளவாடி சென்று விடலாம். ஆனால் தற்போது கொரானா தொற்று காரணமாக, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த காரணத்தால் திம்பம் மலைப் பகுதியிலிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் பிரிவிலிருந்து  காளி திம்பம், பெஜலெட்டி,  ராமர் அணை, தலமலை, தொட்டபுரம், நெய்தாளபுரம், முதியனூர், சிக்கள்ளி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை தாண்டியும், அடர்ந்த வனப்பகுதியில் உள்ளே முப்பது கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். திம்பத்திலிருந்து மொத்தம் 43 கிலோ மீட்டர் பயணித்து தான் தாளவாடி சென்றடைய வேண்டும்.

நேற்று முதல் இந்த  வழியாகத்தான் அரசு பேருந்துகள் செல்ல வேண்டும். வனத்துறை அனுமதி பெற்று  இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சென்று வருகின்றன.கர்நாடக எல்லைப் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லாததால் மாற்றுப்பாதையான தலைமலை வனப்பகுதிக்குள் சென்று பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. வழக்கமான பாதையை விட இந்த பாதையில் செல்கின்ற பொழுது 13 கிலோமீட்டர் அதிகமாக பயணிக்க வேண்டி உள்ளது.

மேலும் குறுகலான வளைவுகளும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ளதால் வனவிலங்குகள் எந்த நேரமும் குறுக்கீடு செய்ய வாய்ப்புள்ள காரணத்தால் வழக்கமாக செல்லும் பயண நேரத்தை விட இந்தப் பாதையில் செல்கின்ற பொழுது ஒரு மணி நேரம் தாமதமாக  பயணிக்க வேண்டியுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே வனப்பகுதியில் பயணிக்கும் இந்த மாற்று பாதை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.அதுவரை இந்த வனப்பகுதியில் வழியாகத்தான் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Top